Sunday, November 3, 2019

கைம்மாறு

இன்றைய (4 நவம்பர் 2019) நற்செய்தி (லூக் 14:12-14)

கைம்மாறு

ஆங்கிலத்தில் 'பொலிடிக்கலி கரெக்ட்' (politically correct) என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதாவது, நான் பேசுவதும், எழுதுவதும், சொல்வதும் ஒட்டுமொத்த சமூகத்திற்கு ஏற்புடையதாக, சமூகத்திற்கு இடறல் விளைவிக்காததாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, டோல் கேட்டில் திருநங்கையர் இரக்கின்றார்கள் என வைத்துக்கொள்வோம். நான் காரில் எனக்கு அருகிலிருப்பவரிடம், 'ஓர் அலி அல்லது ஓர் ஒன்பது பணம் கேட்கிறார்' என்று நான் சொன்னால், நான் 'பொலிடிக்கலி கரெக்ட்' அல்ல. அது மட்டுமல்ல. நான் அவர்களுடைய மாண்புக்கு எதிராகப் பேசுகிறவன் ஆகிவிடுவேன். கண் தெரியாதவரை 'குருடன்' என அழைப்பது, காது கேட்காதவரை 'செவிடன்' என அழைப்பது, அல்லது என் வகுப்பு மாணவரை 'மக்கு' என அழைப்பது போன்றவை. நான் பேசுவதில்கூட மற்றவரின் மாண்பைக் காப்பாற்ற வேண்டும் என்ற பின்னணியில் உருவானவைதான் 'திருநங்கை', 'மாற்றுத்திறனாளி', 'அறிவுத்திறன் குறைந்தவர்' போன்ற வார்த்தைகள். வெறும் பெயர்கள் மட்டுமல்ல. அவர்களைக் குறிப்பிட்டு அவர்களுடைய செயல்களையும் நான் விமர்சனம் செய்யக்கூடாது. 'திருநங்கையர் அடாவடித்தனம் செய்வார்கள்' என்று நான் சொன்னாலும் அது தவறு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கொஞ்சம் 'பொலிடிக்கலி நாட் கரெக்ட்' என்றே தெரிகிறார். யாரையெல்லாம் விருந்துக்கு அழைக்கக்கூடாது, விருந்துக்கு அழைக்க வேண்டும் என்று சொல்கின்ற இயேசு, 'நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றவரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்கு கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை' என்கிறார். இதை ஒருவேளை ஏழையோ, அநாதையோ, கால் ஊனமுற்றவரோ, அல்லது பார்வையற்றவரோ வாசித்தால் அல்லது கேட்டால் அவருடைய மனம் எப்படி பதைபதைக்கும்? ஏன் அவர்களிடம் கைம்மாறு செய்ய ஒன்றுமே இல்லையா? பொருளால் செய்வதுதான் கைம்மாறா? அன்பால், உடனிருப்பால் செய்வது கைம்மாறு ஆகாதா? இன்றைய நாளில் கால் ஊனமுற்றவர் அல்லது பார்வையற்றவர் செல்வத்தில் உயர்ந்த நிலையில் இல்லையா? 

இந்தக் கேள்விகள் இன்று நாம் கேட்பது சரி.

ஆனால், இயேசுவின் காலத்தில் நிலை அப்படி அல்ல. ஏழைகளும், உடல் ஊனமுற்றவர்களும், அநாதைகளும், கைம்பெண்களும் சமூகத்தின் சாபங்களாகக் கருதப்பட்டனர். இன்றைய நம் அரசியல் சூழல்கூட, ஏழ்மையைக் களைவதற்குப் பதிலாக, ஏழையரையே ஒட்டுமொத்தமாகக் களைய மெனக்கெடுவதுபோலத்தான் இருக்கிறது.

இப்பாடத்தின் சொல்லாடல் பிரச்சினைகளை விட்டுவிட்டு பாடத்திற்கு வருவோம்.

இயேசுவின் சமகாலத்தில் விருந்தோம்பல் என்பது ஒருவரின் சமூக அந்தஸ்தை மற்றவர்களுக்குக் காட்டி பெருமை கொள்ளவும், அல்லது மற்றவர்களைவிட தான் உயர்ந்தவர் என்று பெருமிதம் கொள்ளவும், அல்லது இல்லாதவர்களை அவமானப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருந்தது. மேலும், விருந்தோம்பல் செய்பவர் கைம்மாறு கருதியே விருந்தோம்பல் செய்தார். இந்த நிலையில் விருந்தோம்பல் பற்றிப் பேசுகிற இயேசு ஏழைகளால் விருந்தோம்பல் செய்ய முடியாது என்று சொன்னாலும், கடவுள் அவர்கள் சார்பாக விருந்தோம்பல் செய்வார் என்று சொல்வதன் வழியாக அவர்கள் கடவுளின் கண்மணிகள் என்றும், கடவுளின் பார்வையில் உயர்ந்தவர்கள் என்றும் சொல்லி அவர்களுடைய சமூக நிலையை உயர்த்துகின்றார்.

இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லும் பாடம் எவை?

அ. நான் அனைத்திலும் கைம்மாறு செய்ய நினைப்பது தவறு. ஏனெனில், கடவுளிடமிருந்து நான் பெற்ற கொடைகளுக்கு நான் ஒருபோதும் கைம்மாறு செய்ய முடியாது. அதுபோல, தாயின் அன்பு, தந்தையின் தியாகம், உடன்பிறப்புக்களின் உடனிருப்பு, தோழர்களின் தோழமை போன்றவற்றிற்கு நான் ஒருபோதும் கைம்மாறு செய்யவே முடியாது. கைம்மாறு செய்வதைப் பற்றி நான் யோசிக்கும்போது கணக்குப் பார்ப்பவனாக மாறிவிடுகிறேன். இன்று என் வாழ்வில் கடவுள் இனியவர்கள் பலர் வழியாக ஆற்றிய செயல்களை நாம் பட்டியல் இடுவோமா? கைம்மாறு செய்ய முடியாத இந்நிலையில் அவர்களை நான் கடவுளின் கொடையாக ஏற்றுக்கொள்கிறேனா?

ஆ. பிறரைப் பார்க்கும் என்னுடைய பார்வை எப்படி இருக்கிறது? ஒருவரின் அடையாளங்களைக் கடந்து என்னால் பார்க்க முடிகிறதா? நான் பார்க்கும் ஒருவரில் என்னுடைய வலுவின்மையையும் நொறுங்கிநிலையையும் நான் அனுபவிக்க முடிகிறதா?

இ. இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 11:29-36), 'கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை' என்கிறார் பவுல். இவை நமக்கு மிகவும் ஆறுதல் தருகின்றன. ஒரு பக்கம், நம்முடைய குற்றவுணர்வைக் களைகின்றன. இன்னொரு பக்கம், நம்முடைய அழைத்தல் மற்றும் அருள்கொடைகள் பற்றி இன்னும் அக்கறையுடனும் பொறுப்புடனும் இருக்க நம்மைத் தூண்டுகின்றன. நம்மிடம் அவர் கைம்மாறு கருதுவதில்லை என்றாலும், நாம் பொறுப்புணர்வுடன் இருக்க அவர் விழைகின்றார்.


Friday, November 1, 2019

அனைத்து ஆன்மாக்கள் நாள்

இன்றைய (2 நவம்பர் 2019) திருநாள்

அனைத்து ஆன்மாக்கள் நாள்

இன்றைய நாளில் இறந்த நம் முன்னோர்களை நினைவுகூறுகின்றோம். நேற்று நாம் நினைவுகூர்ந்தவர்களும் இறந்த நம் முன்னோர்களே. அவர்கள் மகிமை பெற்றவர்கள். கடவுளை நேருக்கு நேர் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள். இன்று நாம் நினைவுகூர்பவர்கள் பாதி வழி சென்று மீதி வழி செல்ல முடியாதவர்கள். 'துன்புறும் திருச்சபையில்' உள்ள இந்த உறுப்பினர்களுக்காக நாம் இன்று செபிக்கின்றோம்.

அ. துன்புறும் நிலை அல்லது உத்தரிக்கிற நிலை என்றால் என்ன?

நம்முடைய கத்தோலிக்க நம்பிக்கையில் மோட்சமும் நரகமும் உண்டு. 'மோட்சம் போகும் அளவிற்கு புண்ணியம் செய்யாதவர்கள்' அல்லது 'நரகத்தில் வீழ்த்தப்படும் அளவிற்கு மோசமாக இல்லாதவர்கள்' என்னும் இடைப்பட்ட மக்கள், சிறிதுகாலம் துன்புற்று, தங்கள் தவற்றுக்குப் பரிகாரம் செய்து மோட்சத்திற்குள் நுழைபவர்கள் இவர்கள்.

நான் ஓர் ஆலயத்திற்குச் சென்றபோது, 'உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!' என்று மக்கள் செபிக்கக் கேட்டேன். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த ஆன்மாக்களே நம் செபத்தின் தேவையில் இருப்பவர்கள். இவர்கள் எப்படி நமக்காக வேண்ட முடியும்? இவர்கள் கடவுளின் முகத்தைக் கண்டுவிட்டார்கள். ஆனால், தொடர்ந்து காண முடியாமல் இருக்கிறார்கள். எனவே அவர்கள் நமக்காகக் செபிக்கும் தகுதி பெற்றவர்களே.

ஆ. இறந்தவர்களுக்காக செபிப்பது சரியா?

காலத்தையும் இடத்தையும் கடந்த நம் முன்னோர்களுக்கு, காலத்திற்கு இடத்திற்கும் உட்பட்டு நாம் செய்யும் செபமும், ஒப்புக்கொடுக்கும் திருப்பலியும் பலன் தருமா?

இயேசு எல்லாப் பாவங்களுக்காகவும் இறந்து மீட்பைக் கொண்டுவந்துவிட்டார் என்றால், நான் செய்யும் செபம் அவருடைய இறப்பைவிடப் பெரியதா? அவர் செய்த மீட்புச் செயல் இறந்தவர்களுக்கு கிடையாதா?

துன்பத்தை உணர உடல் அவசியம். உடல் இல்லாத ஆன்மாக்கள் எப்படி துன்புற முடியும்?

வெறுங்கையராய் வீடு திரும்பிய இளைய மகனை தந்தை ஏற்றுக்கொள்வது போல, புண்ணியம் ஏதும் இல்லாத வெறுங்கையராய் நாம் செல்லும்போது கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டாரா?

கிறிஸ்தவ மதம் சாராதவர்களுக்கு என்ன நடக்கும்?

போன்ற கேள்விகள் இந்த நாளுக்குச் சவாலாக இருக்கின்றன.

2 மக்கபேயர் 12ல் இறந்தோர்க்காக செபிக்க யூதா பணம் திரட்டுவதைப் பார்க்கிறோம். மேலும், 1 கொரி 15ல் வாழ்வோர் ஒருவர் இறந்த ஒருவரின் சார்பாக திருமுழுக்கு பெறும் நிகழ்வைப் பார்க்கிறோம்.

இ. இன்றைய நாள் நமக்குத் தரும் செய்தி என்ன?

1. இணைந்திருத்தல்
இறந்த நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, உடன்பிறப்புக்கள், நண்பர்கள் ஆகியோரோடு நாம் இணைந்திருக்கின்றோம். நமக்கும் அவர்களுக்கும் உள்ள இணைப்பைக் கொண்டாடுகிறோம். நாம் எல்லாரும் பிறக்கிறோமே தவிர, இறப்பதில்லை. ஏனெனில், எங்கோ, எப்படியோ வாழ்கிறோம். ஆகையால்தான், இறந்தவர்களின் கல்லறைகளை ஊருக்கு வெளியே வைத்து அவர்களைக் காவல் தெய்வங்களாகப் பாவிக்கும் வழக்கம் இன்றும் நம்மிடையே இருக்கின்றது. வாழ்வை வாழ்ந்து முடித்த அவர்கள் வாழும் நமக்கு வழிகாட்டிகள். ஆக, இன்றைய நாளில் நாம் ஏற்றும் மெழுகுதிரி அவர்களின் இருப்பை நாம் கண்டுகொள்ளும் ஒளிக்கீற்றாக இருக்கின்றது.

2. நம்முடைய நிலையாமையைக் கொண்டாட வேண்டும்

'இவ்வுலகில் எதுவும் நிரந்தரமல்ல' என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது இந்நாள். 'நாம எப்பவும் இருப்போம்' என்று நினைத்து வாழ்ந்தவர்கள் இன்று கல்லறைகளில் இருக்கிறார்கள். இப்படி நினைத்து வாழும் நாமும் ஒருநாள் கல்லறையில் இருப்போம். இதுதான் இயற்கையின் நியதி. ஆகையால்தான் சபை உரையாளர், 'வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது. அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலக முடியாது. பணம் கொடுத்தும் தப்ப முடியாது' (காண். 8:7-8) என்கிறார். 'இந்தப் போருக்கு நான் வரல' என்று சொல்லி விலகவோ, 'இவ்வளவு பணம் வைத்துக்கொள்ளுங்கள். என்னை விட்டுவிடுங்கள்' என்று பணயம் கட்டவோ முடியாது. ஆனால், நாம் பயப்படத் தேவையில்லை. 'இறப்புதான் வாழ்க்கையை நாம் இனிமையாக வாழ நம்மைத் தூண்டுகிறது' என்பார் ஆப்பிள் நிறுவன இணைஉருவாக்குநர் ஸ்டீவ் ஜாப்ஸ். நாம் நிலையற்றவர்கள். எனவே, நிலையற்ற இத்தருணத்தை - ஒளியை - பயன்படுத்தி, நிலையானதைச் சம்பாதிக்க வேண்டும். நம்முடையை நிலையாமையை, வலுவின்மையைக் கொண்டாடும் மனமுதிர்ச்சி அவசியம். இந்த மனமுதிர்ச்சி பெற நாம் பற்றுக்களைக் களைதல் வேண்டும். பயம் மற்றும் குற்றவுணர்வு விடுத்தல் வேண்டும்.

3. இறப்புக்கு முன் வாழ்வு

இறப்புக்குப் பின் வாழ்வைப் பற்றிக் கவலைப்படும் நாம் இறப்புக்கு முன் இருக்கும் வாழ்வு பற்றிக் கவலையில்லை பல நேரங்களில். சில நேரங்களில் இறப்புக்கு முன் நாம் வாழ்வதே இல்லை. நம் அனைவருக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கிறது என்று சொல்வார்கள். முதல் வாழ்க்கை நாம் பிறக்கும் நாளிலிருந்து தொடங்குகிறது. இரண்டாவது வாழ்க்கை, 'நமக்கு ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது' என்று உணரும் நாளில் தொடங்குகிறது. பலர் இரண்டாவது வாழ்வை இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லை. 'எனக்கு ஒரு வாழ்க்கைதான் உண்டு' என்று உணரும்போது அதை நான் அமைதியுடன் மகிழ்வுடன் வாழ்வேன். சண்டை சச்சரவுகளில் வீணாக்க மாட்டேன். ஆண்டுகள் என்று பார்த்தால் வாழ்க்கை நீண்டது போலத் தெரியும். ஆனால், பத்தாண்டுகள் என்று பார்த்தால் மிகவும் குறைவு. வாழ்க்கை என்னும் ஓவியம் நேரம் என்ற தாளில் வரையப்படுகிறது. நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழித்தல் அவசியம். இதனால்தான், திருப்பாடல் ஆசிரியர், 'எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே. வலிமை மிகுந்தோர்க்கு எண்பது. அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்' (90:10) என்று நிலையாமையைக் கொண்டாடுவதோடு, 'எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும். அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்' (90:12) என்று மன்றாடுகின்றார்.

ஆண்டவரே, இறந்த நம்பிக்கையாளர்கள் உம் இரக்கத்தால் நிலையான அமைதியில் இளைப்பாறுவார்களாக! முடிவில்லாத ஒளி அவர்கள்மேல் ஒளிர்வதாக! இன்றும்! என்றும்!!