Sunday, April 29, 2018

தெய்வங்களே மனித உருவில்

திருத்தூதர்பணிகளில் கமாலியேல் என்ற கதைமாந்தருக்குப் பின் என்னைக் கவர்ந்த கதைமாந்தர்(கள்) லிக்கவோனிய மக்கள். லிக்கவோனிய நகரமான லிஸ்திராவில் நற்செய்தியை அறிவிக்கச் சென்ற பவுலும் பர்னபாவும் பிறவியிலேயே கால் வழங்காத ஒருவருக்கு நலம் தருகின்றனர்.

கால் வழங்காத இந்த நபர் பவுல் பேசியதை உற்றுக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

'நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்' என்று பவுல் சொன்னவுடன் எழுந்து நிற்கின்றார் அவர். துள்ளி எழுந்து நடக்கத் தொடங்குகின்றார்.

இதைக் கண்ட மக்கள் லிக்கவேனிய மொழியில், 'தெய்வங்களே மனித உருவில் நம்மிடையே இறங்கி வந்திருக்கின்றன' என்று அக்களிக்கின்றனர்.

இந்த நேரத்தில் இவர்களின் முகத்தில் எவ்வளவு அக்களிப்பு இருந்திருக்க வேண்டும்.

விபத்து நேரத்தில், மருத்துவமனையில் நாம் அல்லது நம் அன்பிற்குரியவர் இக்கட்டான சிகிச்சை பெருகையில், கடன் பிரச்சினையின்போது, நம் கையறு நிலையில், முன்பின் தெரியாத ஊரில் இப்படி ஏதாவது நேரத்தில் துணைக்கு வந்த ஒருவரை, 'கடவுளே நேரில் வந்ததுபோல இருக்கு' என்று நாமும் சொல்லியிருப்போம். அல்லது மற்றவர்கள் சொல்லக் கேட்டிருப்போம்.


லிஸ்திரா மக்கள் அத்தோடு விட்டபாடில்லை. பர்னபாவுக்கு 'சேயுசு' என்றும், பவுலுக்கு 'எர்மசு' என்றும் பெயரிடுகின்றனர். 'சேயுசு' கிரேக்க கடவுளர்களின் தூதர் கடவுள். 'எர்மசு' பேச்சாற்றலின் கடவுள். சேயுசு ஆலயத்தின் பூஜாரி ஓடிப்போய் காளைகளையும் பூமாலைகளையும் கொண்டு வந்து திருத்தூதர்கள்முன் பலியிட விரும்புகின்றார்.

இதைக் கண்ட திருத்தூதர்கள், 'நாங்களும் மனிதர்கள்தாம்!' என்கின்றனர். இதுதான் அடுத்த கிளாசிக்.

'நீதான் கடவுள்' என்று நம்மிடம் யாராவது சொல்லும்போது நம் உச்சிகுளிர்ந்து அந்த வாழ்த்தை அப்படியே உண்மை என்று ஏற்று மகிழ ஆரம்பிக்கின்றோம். ஆனால் பவுலும், பர்னபாவும் தங்கள் முன்னிருந்த ஒரு சூழலை தங்களின் தன்னலத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்தாமல் தங்கள் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.

லிக்கவோனிய மக்களின் எளிமை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. சாதாரண மக்கள். சின்ன சின்ன விஷயங்களில்கூட, சின்ன சின்ன மனிதர்களில்கூட தெய்வங்களைக் காண அவர்களால் முடிகிறது.

இன்று நான் காணும் மனிதர்கள் எல்லாம் விண்ணிலிருந்து வந்த தெய்வங்கள் என நினைத்து 'அழகர்,' 'முருகன்,' 'மீனாட்சி,' என்று சூட்டினால் எத்துணை நலம்!

2 comments:

  1. கண்டிப்பாக லிக்கவோனிய மக்களுக்கு " மனித உருவில் தெய்வங்களாகத்" தெரிந்த பவுல் மற்றும் பர்னபா போல நம் வாழ்க்கைச்சூழலிலும் பல மனிதர்கள் நமக்குத் தெய்வங்களாக வந்திருப்பார்கள்தான்.ஏன்...நம்மையும் கூட மற்றவர் தெய்வங்களாக அங்கீகத்த நேரங்கள் கூட இருந்திருக்கலாம்.இம்மாதிரி சமயங்களில் நாம் காக்க வேண்டியது " நாங்களும் மனிதர்கள் தாம்" என்ற தன்னடக்கமே என்று தந்தை கூறுவது சரி ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால் நாம் இன்று காணும் மனிதர்களை விண்ணிலிருந்து வந்த தெய்வங்கள் என நினைத்து 'அழகர்','முருகன்','மீனாட்சி' என்றுதான் பெயர் சூட்ட வேண்டுமா? ஏன் 'மரியா',' 'வெரோனிக்கா' என்றெல்லாம் பெயர் சூட்டக்கூடாதா என்று என்னையே கேள்வி கேட்டேன். அப்புறம் தான் என் மரமண்டைக்கு உரைத்தது.....மதுரையின் மூலை முடுக்கெல்லாம் அழகர் ஆற்றில் இறங்கப்போகும் நிகழ்வைக்கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நேரம் தந்தை வேறெந்த பெயர்களை யோசிக்க முடியும்? நாமும் நினைத்தால் மற்றவருக்கு நாம் விண்ணிலிருந்து இறங்கி வந்த தெய்வங்களாக உருமாற்றம் பெற முடியும் என்ற நேர்மறை எண்ணத்தைத் தந்த தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Yesu all the best for your new ministry of teaching .God has placed you in the right place. God bless us

    ReplyDelete