Tuesday, April 24, 2018

மாற்கு நற்செய்தியாளர்

மாற்கு நற்செய்தியாளர்

நாளை (25 ஏப்ரல் 2018) தூய மாற்கு நற்செய்தியாளரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

நாளைய முதல் வாசகத்தில் தூய பேதுரு தன் திருமடலில், 'என் மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றார்' (1 பேது 5:13) என தன் திருமடலை நிறைவுசெய்கின்றார்.

எப்போதெல்லாம் 'என் மகன்' என்ற அடைமொழி திருமுகங்களில் பயன்படுத்தப்படுகிறதோ அந்த இடங்கள் எனக்கு மிகவும் கவர்கின்றன. நற்செய்தியாளர் மாற்குவை தன் மகன் என அன்புடன் அழைக்கின்றார் பேதுரு. பவுலுடன் பர்னபா இணைந்து திருத்தூதுப்பணி செய்ததுபோல பேதுருவுடன் இணைந்து பணி செய்தவர் மாற்கு. இயேசுவைப் பற்றிய நற்செய்தியை பேதுருவே மாற்குவுக்கு கற்றுத்தந்திருப்பார்.

மாற்கு நற்செய்தியாளர்தான் இயேசு பாஸ்கா விருந்து ஏற்பாடு செய்ய திருத்தூதர்கள் சென்றபோது தண்ணீர்குடம் சுமந்து சென்றவர் என்றும், இயேசு கைது செய்யப்பட்டபோது ஆடையின்றி ஓடிய இளைஞர் என்றும் மரபு சொல்கிறது.

நாம் வைத்திருக்கும் நான்கு நற்செய்தி நூல்களில் மாற்கு நற்செய்திநூல்தான் முதலில் எழுதப்பட்டது. மற்ற நற்செய்தி நூல்களுக்கு ஆதாரமாக இருந்ததும் மாற்கு நற்செய்தியாளரே.

மாற்கு நற்செய்தியில் மிக முக்கிய கூறாக இருப்பது 'மெசியா இரகசியம்' - இயேசுவை மெசியா என சீடர்கள் ஏற்றுக்கொள்ளாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன.

இறுதிவரை இதை இரகசியமாகவே வைத்திருக்கின்றார் மாற்கு. மேலும், இந்நற்செய்தி துன்பத்தின் நற்செய்தி - அதாவது இயேசு பெரும்பாலும் துன்பப்படுகிறவராகவே சித்தரி;க்கப்படுவார் - என்றும் அழைக்கப்படுகின்றது.


1 comment:

  1. நற்செய்தியாளர் மாற்கு குறித்த பல புதிய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் தந்தை.அதில் எனக்குப் புதிதாகவும்,சுவாரஸ்யமாகவும் தெரிவது " இயேசுவை மெசியா என சீடர்கள் ஏற்றுக்கொள்ளாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன" எனும் " மெசியா இரகசியம்" மட்டுமல்ல மாற்குவின் நற்செய்தி " துன்பத்தின் நற்செய்தி" என்பதும் கூட.மற்றபடி தந்தைக்குப் பிடித்த 'என் மகன் மாற்கு' என பேதுருவால் விளிக்கப்படும் மாற்கு நமக்கும் கூடப்பிடித்த மகன் தான். " என் மகன்" என்று அன்புடன் அழைக்கப்பட ஒருவன் இருந்தால் நாமும் பேறுபெற்றவர்களே! அழகான பல புதிய விஷயங்களுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete