Sunday, April 29, 2018

தெய்வங்களே மனித உருவில்

திருத்தூதர்பணிகளில் கமாலியேல் என்ற கதைமாந்தருக்குப் பின் என்னைக் கவர்ந்த கதைமாந்தர்(கள்) லிக்கவோனிய மக்கள். லிக்கவோனிய நகரமான லிஸ்திராவில் நற்செய்தியை அறிவிக்கச் சென்ற பவுலும் பர்னபாவும் பிறவியிலேயே கால் வழங்காத ஒருவருக்கு நலம் தருகின்றனர்.

கால் வழங்காத இந்த நபர் பவுல் பேசியதை உற்றுக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

'நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்' என்று பவுல் சொன்னவுடன் எழுந்து நிற்கின்றார் அவர். துள்ளி எழுந்து நடக்கத் தொடங்குகின்றார்.

இதைக் கண்ட மக்கள் லிக்கவேனிய மொழியில், 'தெய்வங்களே மனித உருவில் நம்மிடையே இறங்கி வந்திருக்கின்றன' என்று அக்களிக்கின்றனர்.

இந்த நேரத்தில் இவர்களின் முகத்தில் எவ்வளவு அக்களிப்பு இருந்திருக்க வேண்டும்.

விபத்து நேரத்தில், மருத்துவமனையில் நாம் அல்லது நம் அன்பிற்குரியவர் இக்கட்டான சிகிச்சை பெருகையில், கடன் பிரச்சினையின்போது, நம் கையறு நிலையில், முன்பின் தெரியாத ஊரில் இப்படி ஏதாவது நேரத்தில் துணைக்கு வந்த ஒருவரை, 'கடவுளே நேரில் வந்ததுபோல இருக்கு' என்று நாமும் சொல்லியிருப்போம். அல்லது மற்றவர்கள் சொல்லக் கேட்டிருப்போம்.


லிஸ்திரா மக்கள் அத்தோடு விட்டபாடில்லை. பர்னபாவுக்கு 'சேயுசு' என்றும், பவுலுக்கு 'எர்மசு' என்றும் பெயரிடுகின்றனர். 'சேயுசு' கிரேக்க கடவுளர்களின் தூதர் கடவுள். 'எர்மசு' பேச்சாற்றலின் கடவுள். சேயுசு ஆலயத்தின் பூஜாரி ஓடிப்போய் காளைகளையும் பூமாலைகளையும் கொண்டு வந்து திருத்தூதர்கள்முன் பலியிட விரும்புகின்றார்.

இதைக் கண்ட திருத்தூதர்கள், 'நாங்களும் மனிதர்கள்தாம்!' என்கின்றனர். இதுதான் அடுத்த கிளாசிக்.

'நீதான் கடவுள்' என்று நம்மிடம் யாராவது சொல்லும்போது நம் உச்சிகுளிர்ந்து அந்த வாழ்த்தை அப்படியே உண்மை என்று ஏற்று மகிழ ஆரம்பிக்கின்றோம். ஆனால் பவுலும், பர்னபாவும் தங்கள் முன்னிருந்த ஒரு சூழலை தங்களின் தன்னலத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்தாமல் தங்கள் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.

லிக்கவோனிய மக்களின் எளிமை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. சாதாரண மக்கள். சின்ன சின்ன விஷயங்களில்கூட, சின்ன சின்ன மனிதர்களில்கூட தெய்வங்களைக் காண அவர்களால் முடிகிறது.

இன்று நான் காணும் மனிதர்கள் எல்லாம் விண்ணிலிருந்து வந்த தெய்வங்கள் என நினைத்து 'அழகர்,' 'முருகன்,' 'மீனாட்சி,' என்று சூட்டினால் எத்துணை நலம்!

Friday, April 27, 2018

அதுவே போதும்

அதுவே போதும்

'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்'

இது பிலிப்பின் விண்ணப்பம்.

இந்த விண்ணப்பத்திற்கு பதில் தரும் இயேசு அதை மூன்று கேள்விகளாகத் தருகின்றார்:

(அ) இவ்வளவு காலம் நான் உங்களோடு உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா?
(ஆ) என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, தந்தையை எங்களுக்குக் காட்டும் என்று நீ எப்படிக் கேட்கலாம்?

(இ) நான் தந்தையினுள்ளும், தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?

இயேசுவின் இந்தக் கேள்விகள் அறிதல், கேட்டல், நம்பிக்கை கொள்தல் என்ற மூன்று நிலைகளில் இருக்கிறது.

மேற்காணும் கேள்விகள்-பதில்களிலிருந்து நாம் மூன்று உள்கருத்துக்களை எடுத்துக்கொள்வோம்:

1.தந்தையாகிய இறைவனே கடவுள். அந்தக் கடவுளிடம் திரும்பிச் செல்கிறார் இயேசு. அப்படி என்றால், அவர் அந்தக் கடவுளிடமிருந்து வந்தவர். மேலும், தந்தையும் இயேசுவும் ஒருவர் மற்றவரோடு இணைந்திருப்பதால் இயேசுவும் கடவுளே.

2. தந்தை மற்றும் இயேசு என்னும் இந்தக் கடவுளோடு சீடர்களும் இணைந்துகொள்ள முடியும். ஆக, கடவுள்தன்மையில் இருந்து மனிதர்கள் அந்நியப்பட்டவர்கள் அல்லர். மாறாக, அந்த தன்மையில் இணைந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். இந்த ஆற்றலை உறுதி செய்பவர் இயேசு.

3. சீடர்கள் இயேசுவோடு ஏற்படுத்திக்கொள்ளும் ஒன்றிணைப்புக்கு அடிப்படை தேவை அவர்கள் இயேசுவின்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கை. இயேசுவும் தந்தையும் ஒன்று என்று நம்ப வேண்டும். அந்த தந்தையின் ஒன்றிப்பை நம்புவதற்கு இயேசுவின் சொற்களும், செயல்களும் சான்றாக அமைகின்றன.

Thursday, April 26, 2018

எங்கே போகிறீர்?

நாளைய (27 ஏப்ரல் 2018) நற்செய்தி (யோவான் 14:1-6)

எங்கே போகிறீர்?

இறுதி இராவுணவில் இயேசுவும் அவருடைய சீடர்களும் பேசிக்கொள்ளும் உரையாடல் நேரம் கூடக்கூட ரொம்ப அப்ஸ்ட்ராக்ட் ஆக இருக்கிறது. திராட்சை ரசம் கொஞ்சம் கூடிடுச்சோ என்று எண்ணத் தோன்றுகிறது.

'நான் போகுமிடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்' என்கிறார் இயேசு.
தோமா ரொம்ப பிராக்டிகலான ஆளு. உடனே குறுக்கிட்டு, 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படி தெரிந்துகொள்ள இயலும்?' என விசாரிக்கிறார்.
'வழியும் உண்மையும் வாழ்வும் நானே' என்று இன்னும் கொஞ்சம் குழப்பிவிடுகிறார் இயேசு.

'எங்கே போகிறீர்?' - இது நாம் நம் வாழ்வில் பல இடங்களில் நாம் பலரையும், பலர் நம்மையும் கேட்டிருப்போம். 'எங்கே போகிறீர்?' என்ற கேள்வியில் நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதும் அடங்கியிருப்பதோடு, இந்தக் கேள்வி நம் பயணத்தின் இலக்கையும் குறிக்கிறது.

எல்லாம் நானே என்பதன் வழியாக இயேசு நம்வாழ்வின் இலக்கு என தன்னையே முன்வைக்கின்றார்.

இன்று தோமா இயேசுவைக் கேட்ட கேள்வியை நாமும் நமக்குள்ளே கேட்டுப்பார்ப்போம். அவரை நோக்கி என் பயணம் இருந்தால் எத்துணை நலம்!


Wednesday, April 25, 2018

பெரியவர் அல்ல

நாளைய (26 ஏப்ரல் 2018) நற்செய்தி (யோவான் 13:16-20)

பெரியவர் அல்ல

தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி அவர்களோடு பந்தியில் அமர்ந்திருக்கும் இயேசு பணியாளர் தலைவர் உறவைப் பற்றிப் பேசுகின்றார்.

'பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல.
தூது அனுப்பப்பட்டவரும் அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல'

இது ஏற்கனவே எல்லாருக்கும் தெரிந்த சொலவடைதான். ஆனால், இதைத் தொடர்ந்து இயேசு சொல்வதுபதான் வித்தியாசமாக இருக்கிறது: 'இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.'

பேறுபெற்றவர்கள் என்று வாழ்வதற்கு இயேசு சொல்லும் வழி ஒரு சிறந்த மேலாண்மை தத்துவமாக இருக்கிறது. எப்படி? தலைவர் தானே முடிவு செய்கின்றார். பணியாளர் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம். தலைவர் கொடுக்கும் நிலையில் இருக்கிறார். பணியாளர் பெற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறார். தலைவர் தான் நினைத்ததை செய்ய முடியும். ஆனால், பணியாளரோ தலைவர் நினைப்பதை மட்டுமே செய்ய முடியும்.

இதே போலவே, தூது அனுப்பப்பட்டவரும். இயேசுவின் சமகாலத்தில் தூது அனுப்புதல் மிக முக்கியமான வேலை. இன்றைய குறுந்தகவல், மின்னஞ்சல், கடிதம், கூரியர் என அனைத்து வேலைகளையும் செய்தவர்கள் தூது அனுப்பப்பட்டவர்களே. இவர்களின் வேலை அனுப்பியவரின் செய்தியை அடுத்த பக்கம் இருப்பவருக்கு அப்படியே அறிவிப்பது. இப்படி செல்பவர் தூது அனுப்பியவரை விட சிறியவரே. ஏனெனில் இவர் அலைகிறார். அவர் அலைக்கழிக்கிறார். இவர் ஓடுகிறார். அவர் ஒரே இடத்தில் இருக்கிறார்.

சில நேரங்களில் தலைவரைப் போல அல்லது தலைவரை விட தான் பெரியவர் என்று நினைக்கும் பணியாளர் தன் எல்லையை மீறுகிறார்.

எல்லை மீறாதவர் பேறுபெற்றவர் என்கிறார். மேலும், இங்கே எல்லை மீறுபவராக மறைமுகமாக சொல்லப்படுபவர் யூதாசுதான்.

நிற்க.

ஆனால், ஜெயா-சசிகலா நிகழ்வை எடுத்துக்கொள்வோம். ஜெயா தலைவி. சசிகலா பணியாளர். இங்கே பணியாளர் தலைவியை விட பெரியவர் ஆகவில்லையா?


Tuesday, April 24, 2018

மாற்கு நற்செய்தியாளர்

மாற்கு நற்செய்தியாளர்

நாளை (25 ஏப்ரல் 2018) தூய மாற்கு நற்செய்தியாளரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

நாளைய முதல் வாசகத்தில் தூய பேதுரு தன் திருமடலில், 'என் மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றார்' (1 பேது 5:13) என தன் திருமடலை நிறைவுசெய்கின்றார்.

எப்போதெல்லாம் 'என் மகன்' என்ற அடைமொழி திருமுகங்களில் பயன்படுத்தப்படுகிறதோ அந்த இடங்கள் எனக்கு மிகவும் கவர்கின்றன. நற்செய்தியாளர் மாற்குவை தன் மகன் என அன்புடன் அழைக்கின்றார் பேதுரு. பவுலுடன் பர்னபா இணைந்து திருத்தூதுப்பணி செய்ததுபோல பேதுருவுடன் இணைந்து பணி செய்தவர் மாற்கு. இயேசுவைப் பற்றிய நற்செய்தியை பேதுருவே மாற்குவுக்கு கற்றுத்தந்திருப்பார்.

மாற்கு நற்செய்தியாளர்தான் இயேசு பாஸ்கா விருந்து ஏற்பாடு செய்ய திருத்தூதர்கள் சென்றபோது தண்ணீர்குடம் சுமந்து சென்றவர் என்றும், இயேசு கைது செய்யப்பட்டபோது ஆடையின்றி ஓடிய இளைஞர் என்றும் மரபு சொல்கிறது.

நாம் வைத்திருக்கும் நான்கு நற்செய்தி நூல்களில் மாற்கு நற்செய்திநூல்தான் முதலில் எழுதப்பட்டது. மற்ற நற்செய்தி நூல்களுக்கு ஆதாரமாக இருந்ததும் மாற்கு நற்செய்தியாளரே.

மாற்கு நற்செய்தியில் மிக முக்கிய கூறாக இருப்பது 'மெசியா இரகசியம்' - இயேசுவை மெசியா என சீடர்கள் ஏற்றுக்கொள்ளாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன.

இறுதிவரை இதை இரகசியமாகவே வைத்திருக்கின்றார் மாற்கு. மேலும், இந்நற்செய்தி துன்பத்தின் நற்செய்தி - அதாவது இயேசு பெரும்பாலும் துன்பப்படுகிறவராகவே சித்தரி;க்கப்படுவார் - என்றும் அழைக்கப்படுகின்றது.


Monday, April 23, 2018

அர்ப்பண விழா

நாளைய (24 ஏப்ரல் 2018) நற்செய்தி (யோவா 10:22-30)

அர்ப்பண விழா

பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள் எஸ்ரா மற்றும் நெகேமியா அவர்கள் தலைமையில் கட்டிய இரண்டாம் எருசலேம் ஆலயத்தின் அர்ப்பண விழா ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூறப்பட்டது. இந்த நாளில் எல்லா யூதர்களும் எருசலேமில் கூடி வருவதுண்டு. அப்படி வந்தபோது நடந்த ஒரு நிகழ்வையே நாளைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கவிருக்கின்றோம்.

குளிர்காலமாய் இருந்ததால் இயேசு சாலமோன் மண்டபத்தில் நடந்துகொண்டிருந்தார் என யோவான் பதிவு செய்கின்றார். குளிர்காலத்தில் வழக்கமாக மண்டபத்தில்கூட யாரும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் மண்டபம் என்பது மேற்கூரையை மட்டும் கொண்ட திறந்தவெளி. குளிர் மற்றும் குளிர்காற்றின் தாக்கம் மண்டபத்தில் அதிகமாகவே இருக்கும். மேலும், குளிரை சமாளிப்பதற்காக இயேசு ஒருவேளை நடந்துகொண்டே உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்க முயன்றிருக்கலாம் என்றும் புரிந்துகொள்ளலாம்.

அவரிடம் வருகின்ற யூதர்கள், 'இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்' என்று கேட்கின்றனர்.

ஆனால் இயேசு அப்படிச் சொல்ல மறுக்கிறார். மாறாக, 'நம்பிக்கை' என்ற தலைப்பில் அவர்களோடு உரையாட ஆரம்பிக்கின்றார். ஏனெனில், ஒருவேளை 'நான்தான் மெசியா' என்று இயேசு சொல்லியிருந்தால் இவர்கள் கண்டிப்பாக அவரை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். ஏனெனில், இயேசுவின் சமகாலத்தில் இப்படி நிறையப்பேர் சொல்லிக்கொண்டு திரிந்தனர்.

இயேசுவைப் பொறுத்தமட்டில் அவரை மெசியா என ஏற்றுக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைப் பயணம். இந்த உள்ளொளிப்பயணத்தின் இறுதியில்தான் ஒருவர் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்த நம்பிக்கை என்பது அவரின் குரலைக் கேட்டு அவரை அடையாளம் காண்பதிலேயே அடங்கியுள்ளது.

கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவில் பல நேரங்களில் கேள்விக்கான விடைகள் நம் உள்ளொளிப்பயணத்தில்தான் கிடைக்கின்றன.

ஆலயத்தை அர்ப்பணித்து விழா எடுத்தவர்கள் ஆலயத்தின் பிதாமகனாம் இயேசுவுக்குத் தங்களை அர்ப்பணம் செய்யத் தயங்கினர்.

Wednesday, April 18, 2018

பிலிப்பும் திருநங்கையும்

நாளைய (19 ஏப்ரல் 2018) முதல் வாசகம் (திப 8:26-40)

பிலிப்பும் திருநங்கையும்

'நீர் வாசிப்பதன் பொருள் உமக்குத் தெரிகின்றதா?'

'யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் புரிந்து கொள்ள முடியும்?'

(காண் திப 8:26-40)

திருத்தூதர் பணிகளில் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகளில் ஒன்றுதான் 'பிலிப்பும் எத்தியோப்பிய நிதியமைச்சரும்' (8:26-40).

திருத்தூதர் பிலிப்பு செய்த பற்றிய ஒரே குறிப்பு இதுவே. இவர் திருத்தொண்டர் பிலிப்பாகவும் இருக்கலாம் என்று சொல்கின்றனர்.

எத்தியோப்பிய அரசி கந்தகி நிதியமைச்சராக இருக்கிறார் திருநங்கை ஒருவர். 'கந்தகி' என்பது எத்தியோப்பிய அரசியின் பெயர் என்று சொல்வதைவிட, பட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். 'கந்தகி' என்ற வார்த்தைக்கு 'அரசியான அம்மா' என்ற பொருளும் உண்டு. 'அலி,' 'அண்ணகர்,' 'திருநங்கை' என்று நாம் எந்தச் சொல்லாடலைப் பயன்படுத்தினாலும் பொருள் ஒன்றுதான். அரசர்கள் தங்கள் மனைவியரின் 'நலன்' கருதி, தங்கள் அரண்மனையில் தங்கி பணிபுரியும் அமைச்சர்களாக 'திருநங்கைகளை' மட்டுமே நியமித்தார்கள். நம் கதைமாந்தர் அரசியின் நிதியமைச்சர். ஆக, நன்றாகப் படித்தவராகத்தான் இருந்திருக்க வேண்டும். படித்தவர் மட்டுமல்ல. பக்திமானும் கூட. பல நேரங்களில் படிப்பும், பக்தியும் இணைந்து செல்வதில்லை. எருசலேம் சென்று கடவுளை வணங்கிவிட்டு வீடு திரும்புகிறார். எருசலேம் சென்று வணங்கக்கூடியவர் ஒரு யூதராகத் தான் இருக்க வேண்டும். மேலும், அவரின் கைகளில் இருப்பதும் யூத இறைவாக்கு நூலின் ஒரு பகுதியே - எசாயா 53:7-8.

இவர் இப்படி வாசித்துக்கொண்டிருக்கும் நேரம், இவரின் தேரை ஒட்டி ஓடுமாறு பிலிப்புவுக்குக் கட்டளையிடுகின்றார் ஆண்டவர். தேரின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து ஓடும் அளவிற்கு பிலிப்பு ஆற்றல் பெற்றிருக்கின்றார். மேலும், அந்த ஓட்டத்திலும் தேரில் இருப்பவர் என்ன வாசிக்கிறார் என்பதைக் கேட்கவும் செய்கின்றார். திருநங்கை அமைச்சரே இந்த இறைவார்த்தையை வாசித்திருக்க வாய்ப்பில்லை. அவரின் தேரில் உடன் வந்த அவரின் செயலரோ, அல்லது குருவோ, அல்லது லேவியரோ வாசித்து இவர் கேட்டிருக்கலாம்.

'நீர் வாசிப்பது உமக்குப் புரிகிறதா?' என பிலிப்பு கேட்க, 'யாராவது விளக்கிச் சொன்னால்தானப்பா புரியும்' என்கிறார் திருநங்கை அமைச்சர். அத்தோடு, பிலிப்பையும் தன் தேரில் ஏற்றிக்கொள்கின்றார். தொடர்ந்து அந்த இறைவாக்குப் பகுதி பற்றி நிறைய கேள்விகள் கேட்கின்றார் அமைச்சர். பிலிப்பு அவர் வாசித்த இறைவார்த்தையில் தொடங்கி, இயேசுவைப் பற்றி எல்லாவற்றையும் அறிவிக்கின்றார்.

வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடம் வருகின்றது.

'இதோ, தண்ணீர் உள்ளதே. நான் திருமுழுக்கு பெற ஏதாவது தடை உண்டா?' எனக் கேட்கின்றார் அமைச்சர்.

பிலிப்புவும், அமைச்சரும் தண்ணீருக்குள் இறங்குகின்றனர்.

பிலிப்பு அமைச்சருக்கு திருமுழுக்கு கொடுக்கின்றார்.

ஆற்றை விட்டு வெளியே வந்தவுடன் ஆண்டவர் பிலிப்பை அப்படியே 'தலைமுடியைப் பிடித்து' தூக்கிச் சென்று விடுகிறார். அமைச்சர் மகிழ்ச்சியுடன் தன் வீடு திரும்புகிறார்.

திருநங்கை-அமைச்சர் எனக்குச் சொல்லும் பாடங்கள் மூன்று:

அ. 'குழந்தை உள்ளம்.' தான் ஒரு நிதியமைச்சர் என்றாலும், தனக்குத் தெரியாததும் இந்த உலகில் உண்டு என்பதை உணர்ந்து, 'எனக்கு இது புரியவில்லையே?' என்று மறைநூலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

ஆ. 'உடனடி மனமாற்றம்.' 'அப்படியா? நாளைக்குப் பார்க்கலாம்!' என்று தன் மனமாற்றத்தைத் தள்ளிப்போடாமல், தண்ணீரைக் கண்ட இடத்திலேயே திருமுழுக்குப் பெறுத் துடிக்கின்றார் அமைச்சர். யூதராக வீட்டை விட்டு புறப்பட்டவர், கிறிஸ்தவராக வீடு திரும்புகின்றார். என்னே ஒரு தலைகீழ் மாற்றம்! அவரின் தேரின் வேகம் போலவே இருக்கின்றது அவரின் மனமாற்றமும்.

இ. 'மகிழ்ச்சி.' இதுதான் அவரின் இறுதி உள்ளுணர்வு. மனமாற்றத்தின் வெளி அடையாளம் மகிழ்ச்சி. இயேசுவை அறிந்து கொண்டவர்கள் கொண்டிருக்க வேண்டிய ஒரே உணர்வு இதுதான்: மகிழ்ச்சி.

பிலிப்பு எனக்குச் சொல்லும் மூன்று பாடங்கள்:

அ. 'தயார் நிலை.' பிலிப்பு இருப்பது எருசலேம். அமைச்சரின் தேர் ஓடிக்கொண்டிருப்பது அதற்கு நேரெதிர் திசையின் ஒரு பாலைவனப்பாதை. 'நீ அங்கே போ!' என்று ஆண்டவர் சொன்னவுடன் எழுந்து ஓடுகின்றார் பிலிப்பு. ஆண்டவர் நேரடியாகப் பேசியிருப்பாரா? அல்லது பிலிப்பு ஆண்டவரின் குரலை தன் உள்ளத்தில் கேட்டிருப்பாரா? எந்த மன தைரியத்தில் அவ்வளவு தூரம் ஓடியிருப்பார்?

ஆ. 'கையிலிருப்பதை வைத்து தொடங்குவது.' நற்செய்தி அறிவிப்பதற்கான மிக எளிய மந்திரத்தை பிலிப்பு கடைப்பிடிக்கின்றார். அமைச்சர் வாசித்துக் கொண்டிருந்த இறைவார்த்தையை புள்ளியாகக் வைத்து, அதில் இயேசு என்ற கோலத்தை வரைகின்றார். 'அத மூடி வைங்க! நான் உங்களுக்கு இதைவிட பெரிய ஆளைப் பற்றிச் சொல்கிறேன்!' என்று அவர் தொடங்கியிருந்தால், 'தம்பி, நீ தேரை விட்டு கீழே இறங்கு!' எனச் சொல்லியிருப்பார் அமைச்சர்.

இ. 'முடியைப் பிடித்து தூக்கிச் செல்கிறார் ஆண்டவர்.' முதல் பகுதியில் பிலிப்பு ஓடினார். இரண்டாம் பகுதியில் ஆண்டவர் அவரைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். இந்த வார்த்தையில் மிகப் பெரிய பொருள் இருக்கிறது. அதாவது, நிதியமைச்சர் திருமுழுக்கு பெறத் தயாராகிவிட்டார் என்று நினைத்ததும் பிலிப்புவின் உள்ளத்தில் நிறைய கற்பனை எண்ணங்கள் ஓடியிருக்கும்: 'ஆகா! எவ்வளவு பெரிய சாதனை இது! நிதியமைச்சரையே நான் மனம் மாற்றியிருக்கிறேன்! பேதுருவும், யோவானும் சும்மா எருசேலம் நகரத்துக்குள்ளேயே இருந்து சாதாரண மக்களை மனம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்! அவங்க எல்லாம் சுஜூபி பாய்ஸ். கிணற்றுத் தவளைகள்! வெளியே வந்து நாலு ஜனங்கள பார்த்தாதான நல்லா இருக்கும்! நாளைக்கு போய் நான் இதைப் பற்றி அவர்களிடம் சொல்லணும்! திருமுழுக்கு கொடுத்துவிட்டு, இவர் வண்டியிலேயே இவர் ஊருக்குப் போய், இவர் அரசியையும் மனம் மாற்றணும். அரசியை மனம் மாற்றிவிட்டால் மக்களையும் மனம் மாற்றிவிடலாம். மேலும் அரசியை வைத்து நிறைய காரியங்கள் சாதிக்கலாம். நம்ம மக்களுக்கு பாதுகாப்பு தரும்படி கேட்கலாம்!' - இப்படி நிறைய எண்ணங்கள் ஓடியிருக்கும். இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றார் கடவுள். 'அவரின் வழிகள் நம் வழிகள் அல்ல' என்பது இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 'முடியைப் பிடித்து' அலேக்காகத் தூக்கிக் கொண்டு போகிறார் கடவுள். அருள்பணி நிலையில் இப்படி ஒரு உடனடி மகிழ்ச்சி வந்துவிட்டால் உடனே தேக்கநிலை வந்துவிடும். 'நான் செய்வதுதான் சரி' என்ற மனநிலையும், தற்பெருமையும் உடன் ஒட்டிக்கொள்ளும். இந்த நேரத்தில் கடவுள் என் தலையைப் பிடித்து தூக்கிச் செல்வதே சால்பு.

இறுதியாக, இறைவனின் நற்செய்தி முதலில் திருநங்கை ஒருவருக்கே அறிவிக்கப்படுகிறது என்பதையும் நாம் இங்கே அடிக்கோடிட வேண்டும்.


Friday, April 6, 2018

கல்வியறிவற்றவர்கள்

நாளைய (7 ஏப்ரல் 2018) முதல் வாசகம் (திருத்தூதர் பணிகள் 4:13-21)

கல்வியறிவற்றவர்கள்

நாம் ஒருவரோடு கொள்ளும் அறிமுகம் அல்லது நெருக்கம் நம் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது நிதர்சனமான உண்மை.

எடுத்துக்காட்டாக, நான் இரயிலில் பயணம் செய்கிறேன். என் அருகில் இருப்பவர் முதலில் அந்நியராக இருக்கிறார். நான் பேச்சுக் கொடுக்க கொடுக்க அவர் பக்கத்து மாநிலத்தில் உள்ள ஒரு மறைமாவட்டத்தின் ஆயர் எனத் தெரிகிறார் என வைத்துக்கொள்வோம். என் அணுகுமுறையில் உடனடியாக மாற்றம் வந்துவிடுகிறது. நான் அவருக்குத் தேவையானவற்றைச் செய்ய ஆரம்பிக்கிறேன். அவருக்கு வசதிகள் செய்து கொடுக்கிறேன். இன்னும் பல.

அதே வேளையில், என்னைக் காண ஒருவர் வருகிறார். அவர் பார்ப்பதற்குப் பகட்டாக இருக்கிறார். நான் அவரை முக்கியமானவர் எனக் கருதி ஆவண செய்கிறேன். கொஞ்ச நேர அறிமுகத்தில் அவர் ஓர் ஏமாற்றுப்பேர்வழி எனத் தெரிந்தால், அல்லது அவர் சாதாரணமானவர் எனத் தெரிந்தால் உடனடியாக என் அணுகுமுறையிலும் மாற்றம் வந்துவிடுகிறது.

இவ்வாறாக, ஒருவரின் அறிமுகத்திற்கும் அணுகுமுறைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

எருசலேம் நகரில் போதித்துக்கொண்டிருந்த பேதுருவையும், யோவானையும் பார்த்து மக்கள் வியக்கின்றனர். அவர்கள் பெற்ற விவிலிய மற்றும் இறையயில் நுண்புலம் கண்டு பாராட்டுகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு தலைமைச்சங்கத்திற்கு அழைத்துவரப்பட்டபோது காவலர்களும் அவர்கள்மேல் மிகவே அக்கறை காட்டுகின்றனர். ஆனால், 'அவர்கள் கல்வியறிவற்றவர்கள், சாதாரண மீனவர்கள்' என்று தெரிந்தவுடன் அவர்களின் அணுகுமுறை அப்படியே மாறுகிறது. திருத்தூதர்களை நையப்புடைக்குமாறும், அடிக்குமாறும் கையளிக்கின்றனர்.

இருந்தாலும், திருத்தூதர்கள் தங்கள் மனவுறுதியில் நிலைத்துநிற்கின்றனர்.

ஆக, மற்றவர் நம்மோடு கொண்டு அறிமுகத்தால் நம்மை ஏற்றி வைத்தாலும், இறக்கி வைத்தாலும் நாம் நம் தான்மையில் உறுதியாக இருக்க நாளைய முதல் வாசகம் அழைப்பு விடுக்கிறது.

Thursday, April 5, 2018

நான் மீன்பிடிக்கப் போகிறேன்

நாளைய (6 ஏப்ரல் 2018) நற்செய்தி (யோவான் 21:1-14)

நான் மீன்பிடிக்கப் போகிறேன்

நேற்றைய நாள் நற்செய்தியின் பின்புலத்தில் நெருக்கடி மேலாண்மை பற்றி எண்ணினோம். இன்றைய நற்செய்திப் பகுதியானது திருத்தூதர்களின் மற்றொரு நெருக்கடி நிலையை பிரதிபலிக்கிறது.

'இனி உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆக்குவேன்!' என்று பேதுருவையும், அந்திரேயாவையும் அழைத்தார் இயேசு. ஆனால், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின், 'நான் மீன்பிடிக்கப் போகிறேன்' என மீண்டும் புறப்படுகிறார் பேதுரு.

இவர் இப்படிச் சென்றதன் காரணம் நமக்குத் தெரியவில்லை.
இயேசுவின் உயிர்ப்பின் மேல் உள்ள நம்பிக்கையின்மையா?
அல்லது வயிற்றுப் பசியா?
அல்லது ஏதாவது ஒன்றில் மூளையை இலயித்துக் கொள்வோம் என்ற ஆதங்கமா?
அல்லது கடல்மேல் உள்ள ஆசையா?
அல்லது தற்கொலை முயற்சியா?

எதற்காக பேதுரு மீண்டும் மீன்பிடிக்கச் சென்றார் என்பது தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு எதிர்மறை உணர்வுதான் அவரை அந்த நிலைக்குத் தள்ளுகிறது.

ஆனால், இங்கே அழகு என்னவென்றால் அந்த எதிர்மறை உணர்வில்தான் இயேசு வெளிப்படுகின்றார். ஆக, நம் வாழ்வின் தோல்விகள் மற்றும் பின்வாங்கல்களில் நம் கரம் பற்றி, 'மீன் ஒன்றும் படவில்லையா?' என்கிறார் இயேசு.

இயேசு பேதுருவைக் கடிந்துகொள்ளவோ, வெறுக்கவோ இல்லை.

மாறாக, அவரின் தாய் உள்ளம், 'பசிக்கிறதா?' என்ற கேள்வியாக இருக்கிறது.

வாழ்வின் எந்த இக்கட்டுக்களிலும் தாயாக வருகிறார் இறைவன்.

நெருக்கடி மேலாண்மை

நாளைய (5 ஏப்ரல் 2018) நற்செய்தி (லூக் 24:35-48)

நெருக்கடி மேலாண்மை

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் நடந்த நிகழ்வுகளை இந்த வாரம் வாசித்துக்கொண்டிருக்கிறோம். இயேசுவின் உயிர்ப்பில் நிலவிய பெருத்த சந்தேகம், 'இயேசு உயிர்த்தபோது அவருக்கு உடல் இருந்ததா?' அல்லது 'அவர் வெறும் ஆவியா?' என்பதுதான். இந்த சந்தேகத்தை ஒவ்வொரு நற்செய்தியாளரும் ஒவ்வொரு விதமாக கையாளுகின்றனர். மாற்கு உயிர்ப்பு பற்றி அமைதி காக்கின்றார். மத்தேயு தோமா வழியாக விரலை விட்டை சோதனை செய்கின்றார். யோவான் மகதலா மரியாளைக் கொண்டு இயேசுவை இறுகப் பற்றிக்கொள்ள வைக்கின்றார். லூக்கா அவரை வேகவைத்த மீன்துண்டு சாப்பிட வைக்கிறார்.

உயிர்த்த இயேசுவின் உடல் வித்தியாசமாக இருக்கிறது. நம்மைபோல அவர் சதை கொண்டு இருக்கின்றார். அதே நேரத்தில் பூட்டிய அறைக்குள்ளும் நுழைகின்றார்.

இயேசுவின் உடல் ஆராய்ச்சியை விடுத்து இந்த நற்செய்தி பகுதியை, அதாவது லூக்கா நற்செய்தியாளரின் நிறைவுப் பகுதியை, மேலாண்மைக்கண் கொண்டு பார்ப்போம்.

மேலாண்மையியல் முக்கியமான ஒன்று 'நெருக்கடி மேலாண்மை' - 'க்ரைசிஸ் மேனேஜ்மென்ட்'

நாம் எவ்வளவுதான் கரெக்டாக இருந்தாலும் நெருக்கடி வந்தே தீருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் ஊருக்குச் சென்றிருந்தேன். என் ஞானதந்தை அவர்கள் பஞ்சு அள்ளிப்போடும் எந்திரத்தில் கையைக் கொடுத்து தன் மூன்று விரல்களை இழந்து கட்டுப்போட்டுக்கொண்டு நின்றார். கட்டுப்போட்ட அந்தக்கையை பார்த்தவுடன் எனக்கு பயமாக இருந்தது. ஆனால் அவர் ஒன்றும் நடக்காததபோல எனக்கு கைகொடுக்க என்னை நீட்டி கை நீட்டினார்.

காலையில் எழுதல், உணவு, சைக்கிள் பயணம், வேலை, வீடு, தூக்கம் என்று இருந்தவர் இப்போது உடல்சார்ந்த நெருக்கடியை சந்திக்கின்றார். இவருக்கு உடலிலும் நெருக்கடி. இவரின் வருமானம் நிறுத்தப்படுவதால் குடும்ப உறவிலும் நெருக்கடி. வேலைக்கு புறப்பட்டு சென்ற அந்த நாளில் அவர் இப்படி ஒரு நெருக்கடி வரும் என நினைத்திருக்கமாட்டார்.

நெருக்கடிகள் பல நேரங்களில் திடீரென்றுதாம் வருகின்றன.

இயேசுவின் சீடர்களுக்கு வந்த முதல் நெருக்கடி இயேசுவின் இறப்பு. இறப்போடு போயிருந்தால் ஏழு நாள்கள் அழுதுவிட்டு அமைதியாய் இருந்திருப்பார்கள். இரண்டாம் நெருக்கடி அவரின் உயிர்ப்பு. உயிர்ப்புக்குப் பின் அவர் ஆங்காங்கே தோன்றுவதாக கேள்விப்படுகின்றனர். இது அவர்களுக்கு சந்தேகத்தைக் கூட்டுகிறதே தவிர அவர்களுக்கு நம்பிக்கை கிடைக்கவில்லை. அச்சம், ஐயம், வியப்பு, மகிழ்ச்சி என பல உணர்வுகளை ஒரே நேரத்தில் கொண்டிருக்கின்றனர். இந்த நெருக்கடி நிலையை மேலாண்மை செய்ய இயேசு மூன்று வாழ்க்கைப்பாடங்களை வைக்கின்றார்:

அ. 'அமைதி'
'உங்களுக்கு அமைதி உரித்தாகுக' என்பது அரமேயத்தில் வெறும் 'ஷலோம்' என்பதுதான். யூத மரபில் ஒருவர் மற்றவரைக் காணும்போது, 'ஷலோம்' என்று வாழ்த்துகின்றனர். ஷலோம் என்றால் ஓட்டையில்லாத பானை. அதாவது ஒழுகாத பானை. பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து அதில் சின்ன வெடிப்பு இருந்தால் தண்ணீர் அங்கே வழிந்துவிடும். நெருக்கடி நிலையில் நமக்கு நிறைய ஆற்றல் லீக்கேஜ் இருக்கும். ஆக, நம் பானை வெடிப்பு இன்றி 'ஷலோம்' (முழுமையாக) இருக்க வேண்டும்.

ஆ. 'உடலை ஆவி என நினைக்காதீர்கள்'
இருப்பதை இருப்பதாக பாருங்கள். இல்லாததை இருப்பதாக பார்க்காதீர்கள். 'ஐயோ! பிரச்சினை ஆயிடுச்சு. இனி இப்படி ஆயிடும். அப்படி ஆயிடும்' என்று பதறுதல் கூடாது. 'பதறிய காரியம் சிதறிப்போகும்' என்பது பழமொழி.

இ. 'புள்ளிகளை இணையுங்கள்'
இயேசு தான் பட்ட பாடுகள், துன்பம், இறப்பு, உயிர்ப்பு அனைத்தையும் மோசே, இறைவாக்கு, திருப்பாடல் ஆகியவற்றோடு இணைத்துப் பார்ப்பதோடல்லாமல், 'இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்' என்று சீடர்களை எதிர்காலத்தில் நிறுத்தி எல்லாப் புள்ளிகளையும் இணைக்கிறார். நம்ம வாழ்விலும் ஒவ்வொரு நகர்வும் ஒரு புள்ளி. அந்தப் புள்ளிகளை சற்றே மேல்நின்று பார்த்து இணைக்க வேண்டும்.

இறுதியாக,

இந்த மூன்று பாடங்களும் ஃபெயிலியர் என்றால்,

'சாப்பிட என்ன இருக்கு?' என்று கேட்டு, அதை வாங்கி, அப்படியே அமர்ந்து சாப்பிட வேண்டும்.

Tuesday, April 3, 2018

என்ன நிகழ்ந்தது?

நாளைய (4 ஏப்ரல் 2018) நற்செய்தி (லூக் 24:13-35)

என்ன நிகழ்ந்தது?

அவர்களுள் கிளியோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, 'எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ?' என்றார்.

அவதற்கு அவர் அவர்களிடம், 'என்ன நிகழ்ந்தது?' என்று கேட்டார்.

எனக்கு தெரிந்த அருள்பணியாளர் ஒருவர் இருக்கிறார். அவருடன் அமர்ந்து எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறோம் என வைத்துக்கொள்வோம். எல்லாரும் எதையாவது பேசிக்கொண்டிருக்க அவர் மட்டும் அமைதியாக இருப்பார். நாங்கள் பேசி முடித்து அமைதியானவுடன், 'என்ன?' என்று கேட்பார்.

எம்மாவு சீடர்களின் கேள்விக்கான இயேசுவின் பதில் அப்படித்தான் இருக்கிறது.

சீடர்கள் பதற்றமாக, 'இந்த நாள்களில் நடந்தவை உமக்குத் தெரியாதோ?' என்று கேட்கின்றனர்.

'என்ன நடந்தது?' என ரொம்ப கூலாக கேட்கிறார்.

இந்தக் கேள்வியில் வாழ்க்கையின் ஞானம் இருக்கிறது என நினைக்கிறேன்.

ஒன்று, வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் நமக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. 'அறியாமையே இன்பம்' என்பது ஆங்கிலச் சொல்லாடல். நிறைய தெரிந்துகொள்வதால் நிறைய விரக்தி வரும். பல நேரங்களில் தெரியாமல் இருப்பதுதான் நம் நிம்மதியையும் குலைக்காமல் இருக்கும்.

இரண்டு, வாழ்வில் என்ன நிகழ்வு நடந்தாலும் நம் எதிர்வினை, 'அப்படி என்ன நிகழ்ந்தது?' என்று கேட்டுவிட்டால் நம் பிரச்சினை சின்னதாகிவிடுகிறது. அதாவது, 'இதைவிட கொடுமையானது நடக்க வாய்ப்பிருந்தும் நடக்கவில்லையே' என்று ஆறுதல்பட்டுக்கொள்தல் நலம்.

மூன்று, 'என்ன நிகழ்ந்தது?' என்ற கேள்விக்கான சீடர்களின் பதிலை வைத்து தனது உரையைத் தொடங்குகிறார் இயேசு. ஆக, 'என்ன நிகழ்ந்தது?' என்ற கேள்வி நம் வாழ்வையே மறுஆய்வு செய்ய நம்மைத் தூண்டுகிறது. 'நேற்று என்ன நிகழ்ந்தது?' 'கடந்த வாரம்-மாதம்-ஆண்டு என்ன நிகழ்ந்தது?' என்று நம்மையே கேட்கும்போது நாம் நம்மையே திறனாய்வு செய்துகொள்ளவும் முடிகிறது.

ஆக, இன்று நாம் முகவாட்டத்தோடும் கவலையோடும் ஏமாற்றத்தோடும் இழப்போடும் எம்மாவு என்னும் வாழ்வின் பாதி வழியில் நிற்கும் போது அவரின் கேள்வி, 'என்ன நிகழ்ந்தது?' என்றே இருக்கிறது.


Monday, April 2, 2018

மிகுதியாக பணம் கொடுத்து

நாளைய (2 ஏப்ரல் 2018) நற்செய்தி (மத் 28:8-15)

மிகுதியாக பணம் கொடுத்து

இன்று (1 ஏப்ரல்) புதிய நிதியாண்டை, புதிய ஆண்டுக்கணக்கை தொடங்குகிறோம். இந்நேரத்தில் நாளைய நற்செய்தி வாசகத்தில் காணும் 'பணம்' என்ற வார்த்தையை மையமாக வைத்து சிந்திப்போம்.

இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வை மத்தேயு நற்செய்தியாளர் பதிவுசெய்யும் பகுதியே நாளைய நற்செய்தி. இயேசு உயிர்த்துவிடுகிறார். சில பெண்களுக்குக் காட்சி தருகின்றார். எப்படி இயேசு ஊருக்குள் வந்து காட்சி தந்தரோ அவ்வாறே அவரின் கல்லறைக்கு காவல் இருந்தவர்கள் ஊருக்குள் வந்து தலைமைக்குருக்களிடம் நிகழ்ந்த யாவற்றையும் அறிவிக்கின்றனர். ஆனால், தலைமைக்குருக்களின் எதிர்வினை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது:

அ. பொய்: 'நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது சீடர் வந்து இயேசுவின் உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டனர்.'

ஆ. இலஞ்சம். படைவீரருக்கு மிகுதியான பணம் கொடுத்து - அதாவது அவர்களின் சம்பளத்தைவிட அதிகமாக அல்லது அவர்கள் மனம் விரும்பும் அளவிற்கு.

இ. தவறான பரிந்துரை. 'ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக்கொள்வோம்.'

ஒரு தவறு அடுத்த தவறைப் பெற்றெடுக்கிறது.

இயேசுவின் உயிர்ப்பை நம்ப மறுப்பதற்கு காரணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

'பணம் பெறும்போது - உழைத்தோ அல்லது அன்பளிப்பாகவோ - நம் கைகளுக்கு வரும்போது நம்மை அறியாமல் ஒரு மகிழ்ச்சி தொற்றுகிறது' - இது ஏன்? என நான் பல நாள் நினைத்ததுண்டு. மனிதர்களின் இந்த சபலத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்கின்றனர் தலைமைக்குருக்கள்.

'ஆளுநரை நம்பச் செய்து' - அதாவது, அவருக்கும் பணம் கொடுத்து.

'நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி' - அதாவது நீங்கள் உங்கள் கவனக்குறைவுக்கு தண்டனை பெறாதபடி.

ஒருவரின் நம்பிக்கை மற்றவருக்கு வதந்தியே. அல்லது ஒருவரின் வதந்தி மற்றவருக்கு நம்பிக்கையே - இது இந்த நிகழ்வில் தெளிவாக புலப்படுகிறது.

இயேசு உயிர்த்து விடியலைக் கண்டுவிட்டார். பாவம் இவர்கள்! இன்னும் இருட்டிலேயே இருக்கிறார்கள்!