Monday, October 2, 2017

கிழிஞ்ச சட்டை

டி.எச். லாரன்ஸ் அவர்கள் எழுதிய 'The Man Who Died' என்ற நாவலில் ஒரு வயதான ஏழைத்தம்பதியினர் பற்றி இப்படி பதிவு செய்கின்றார்.

'அவர்கள் வீட்டிற்கு இளைஞன் ஒருவன் வருகிறான்.
குற்றுயிராய் வந்த தனக்கு உணவு தந்து உயிர் தந்ததால் அவளுக்கு தன்னிடமிருந்த காசுகள் சிலவற்றை அள்ளிக்கொடுத்தான்.
அவள் அவற்றை எண்ணிப் பார்த்தாள்.
அவள் ஏழையாய் இருந்ததால் மீண்டும் மீண்டும் அதை எண்ணிப் பார்த்தாள்.'

இது மிகவும் உண்மை.

ஏழைகளின் வீட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும்.

அவர்கள் அதை அடிக்கடி எண்ணிக்கொண்டிருப்பார்கள். இருப்பதையும் தொலைத்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் அப்படிச் செய்கின்றனர் என நான் நினைக்கிறேன்.

இன்று மாலை ஒரு ஆலய நிகழ்வுக்காக சென்றிருந்தேன்.

வயதான நபர் ஒரு ஆலயத்தின் திருப்பண்ட அறையில் பணிவிடை செய்துகொண்டிருந்தார். அவரிடம் ஒரு வேலை கொடுப்பதற்காக அங்கிருந்த அருள்பணியாளர் அவரை அழைத்தார். வேகமாக ஓடி வந்த அவரின் முழுக்கை சட்டை கதவின் கைப்பிடியில் பட்டு அப்படியே அவர் சட்டையை கிழித்துவிட்டது.

இருந்தாலும் அருள்பணியாளர் சொன்ன வேலையை முடித்துவிட்டு தன் இடத்திற்கு மீண்டும் வந்தார்.

அவரின் சட்டை கிழிந்ததை அவரையும் என்னையும் தவிர வேறு எவரும் கவனிக்கவில்லை.

எந்த அளவிற்கு நைந்து போயிருந்தால் சட்டை கிழிந்திருக்கும்!

அல்லது எந்த அளவிற்கு அவர் வேகமாக கடந்திருந்தால் சட்டை கிழிந்திருக்கும்!

எப்படியோ சட்டை கிழிந்துவிட்டது.

திருப்பலியின் நிறைவு வரை அவரின் கவனம் அவரின் சட்டையின்மேல்தான் இருந்தது. கிழிசலை மறைக்க ஏதேதோ செய்து பார்த்தார். இறுதியில் முழுக்கை சட்டையை அரைக்கை சட்டையாக சுருட்டிக்கொண்டார்.

பின் அவரின் முகத்தில் ஒரு புன்னகை.

அவரின் சட்டை கதவிடுக்கில் கிழிந்தது என்பது எனக்கும் அவருக்கும் தெரியும்.

ஆனால் மற்றவர்களுக்கு அந்தக் கிழிசல் அவரின் ஏழ்மையாகத் தெரியுமோ?

நான் காணும் ஒவ்வொன்றுக்கும் பின்னும் ஒரு காரணம் இருக்கலாம். அப்படி இருக்க நான் பார்ப்பதை வைத்து 'இதுதான் சரி. இதுதான் தவறு' என தீர்ப்பிடுவது தவறு என்று கற்றேன் இன்று.


1 comment:

  1. தந்தை தான் நாவலில் வாசித்த, ஏழ்மையோடு சம்பத்தப்பட்ட ஒரு நிகழ்வை தான் நேற்றைய ஆலய நிகழ்வின் போது கண்ட ஒரு நிகழ்வோடு இணைத்து அசை போடுகிறார். நாம் அவசரகோலத்தில ஒரு காரியத்தைச் செயல்படுத்துகையில் கைகாலில் காயம்படுவதும்,ஆடைகள் கிழிந்து போவதும் சாதாரண நிகழ்வுதான்.ஆனால் எங்கே,எப்படி,யாருக்கு நிகழ்கிறது என்பதில் தான் அந்த விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது.அந்தப் பெரியவர் கிழிசலை மறைக்க ஏதேதோ செய்தார் என்பதும்,இறுதியில் முழுக்கை சட்டையை அரைக்கை சட்டையாக சுருட்டிக்கொண்டார் என்பதும் அவரது இல்லாமையை ( அந்த நேரத்தில்) மட்டுமல்ல...அவரது சமயோசிதப்புத்தியையும் பறைசாற்றுகின்றன. இந்த அவரின் செயலுக்கு மற்றவர் என்ன காரணம் கூறினாலும் அவர் செயலின்
    பின்னனி அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.அறிஞர்களின் அரிய நூல்களும்,நம் அருட்பணியாளர்களின் மறையுரைகளும் சொல்லாத பல விஷயங்களை இம்மாதிரி அன்றாடம் நாம் காணும் விஷயங்கள் நமக்கு சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன.அதைப் புரிந்து கொள்ள நமக்கு விசாலமான மனது ஒன்றே தேவை என்பதைத் தன் அனுபவத்தைக் கொண்டு நமக்குக் கற்றுத்தரும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete