Wednesday, December 11, 2019

பொடிப்பூச்சி

இன்றைய (12 டிசம்பர் 2019) முதல் வாசகம் (எசா 41:13-20)

பொடிப்பூச்சி

திருவருகைக்காலத்தின் முதல் வாசகங்களை வாசிக்கும்போதெல்லாம், 'பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதுபோல' என்ற பழமொழிதான் என் நினைவிற்கு வருகிறது.

ஏன் கடவுள் இஸ்ரயேல் மக்களை நாடுகடத்துமாறு விட வேண்டும்? அப்படி விட்டபின் ஏன் அவர்களைப் பார்த்து குய்யோ முறையோ என்று புலம்ப வேண்டும்? அப்புறம் ஏன், 'உன்னை அப்படி ஆக்குவேன், இப்படி ஆக்குவேன்' என்று இறைவாக்குரைக்க வேண்டும்?

'கலகலப்பு' திரைப்படத்தில 'இதுக்கு பருத்திமூட்டை பேசாமா குடோன்லயே இருக்கலாம்ல!' என்று சொல்வதுபோல இருக்கிறது.

இஸ்ரயேல் என்ற பிள்ளையை நன்றாகக் கிள்ளி விடுகின்ற ஆண்டவராகிய கடவுள் தொட்டிலை மாங்கு மாங்கு என்று ஆட்டி குழந்தையைத் தூங்கவைக்க முயல்கின்றார்.

'புழுவே, பொடிப்பூச்சியே' என்று கொஞ்சும் அவர், அவர்களோடு உடனிருப்பதாக வாக்களிப்பதோடு, 'உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன்' என்று உயர்த்துகின்றார். வலுவற்ற புழுவாக இருக்கும் இஸ்ரயேல் மலைகளைப் போரடித்து நொறுக்கும் அளவிற்கு உறுதியான இரும்புக் கம்பியாக மாறுகிறது இறைவனின் தொடுதலால்!

இறைவனின் உடனிருப்பும் தொடுதலும் கிடைப்பவர்கள் இப்படி மாறியிருப்பதை நாம் வரலாற்றில் நிறையவே கண்டுள்ளோம்.

ஒரு பக்கம், இறைவனின் செயல்கள் நமக்குப் புரியாமல் இருந்தாலும், மறுபக்கம் அவரின் உடனிருப்பு நமக்கு ஆற்றல்தருவதாகவே இருக்கிறது.


Tuesday, December 10, 2019

சோர்ந்திருப்பவர்கள்

இன்றைய (11 டிசம்பர் 2019) நற்செய்தி (மத் 11:28-30)

சோர்ந்திருப்பவர்கள்

'சோர்வு' - இது நாம் எல்லாரும் அனுபவத்திருக்கும் ஓர் உணர்வு.

நீண்ட நேரம் வேலை செய்தால், அல்லது உடல்நலக்குறைவால் அல்லது நிறைய மருந்துகள் எடுக்கும்போது அல்லது போதிய உணவு இல்லாதபோது உடல் சோர்வு அடைகிறது. நீண்ட நேரம் வாசித்தால், யோசித்தால், எழுதினால் மூளை சோர்வடைகிறது. எதிர்மறையான நிகழ்வுகள் நடந்தால், உறவுகளில் சிக்கல்கள் எழுந்தால் மனம் சோர்வடைகிறது. நீண்ட நாள்கள் செபிக்காமல் இருந்தால், விவிலியம் வாசிக்காமல் இருந்தால், நற்கருணையைச் சந்திக்காமல் இருந்தால் ஆன்மா சோர்வடைகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் தன்னையே உடல் சோர்வு அகற்றுபவராக முன்வைக்க, நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னையே உள்ளத்தின் (அல்லது மனத்தின் அல்லது ஆன்மாவின்) சோர்வு அகற்றுபவராக முன்வைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் இரண்டாம் எசாயா எனப்படும் நூலின் ஆசிரியர், 'இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர். வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர் சோர்வடையார்' என்று ஆண்டவர்மேல் நம்பிக்கை கொள்பவர் பெறுகின்ற ஆறுதலை எடுத்துரைக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு, 'சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே என்னிடம் வாருங்கள்' என்றழைத்து, 'உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்' என்கிறார்.

உடல் சோர்வை அகற்ற வழி ஆண்டவர்மேல் கொள்ளும் நம்பிக்கை.

உள்ளத்துச் சோர்வை அகற்றும் வழி இயேசுவிடம் வருவது, அவருடைய நுகத்தை ஏற்றுக்கொள்வது, அவரிடம் கற்றுக்கொள்வது.

தனக்காக மட்டுமே உழைக்கும் உடல் சோர்ந்து போகும். சின்னக் குழந்தை ஒன்றை வளர்க்கும் தாயை எடுத்துக்கொள்வோம். அந்தத் தாய் ஒவ்வொரு வேலையையும் இரண்டு முறை செய்ய வேண்டும். தான் சாப்பிட வேண்டும், தன் குழந்தைக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும், தான் தூங்க வேண்டும், குழந்தையையும் தூங்க வைக்க வேண்டும். ஆனால், அவள் சோர்வடைவதில்லை. தன்னுடைய மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும் நீண்ட தூரம் சைக்கிள் மிதித்து வேலைக்குச் சென்றுவிட்டு, நடுஇரவில் வந்து, அரைகுறையாய்த் தூங்கி மீண்டும் அடுத்த நாள் ஓடும் தந்தையும் சோர்வடைவதில்லை. ஏனெனில், இவர்கள் இருவருமே தங்களுக்காக மட்டும் உழைப்பதில்லை.

இன்றைய உலகம் என்னை எனக்காக மட்டும் உழைக்குமாறும், என்னுடைய இன்பத்தை மட்டும் காணமாறும் என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. என்னுடைய நலனுக்காக யாருடைய நலனையும் நான் இழக்க வைக்கலாம் என்று எனக்கு அறிவுறுத்துகிறது.

தன்னையே பார்க்கும் உள்ளம் சோர்ந்து போகும். என்னுடைய நலன், அக்கறை பற்றியே நாடினால் என் உள்ளமும் சோர்ந்துவிடும்.

ஆனால், நான் மற்றவர்களுக்காக உழைக்கிறேன், மற்றவர்களுக்காக எண்ணுகிறேன் என மனிதர்களை மையமாக வைத்தால் இன்னொரு கட்டத்தில் சோர்வு வந்துவிடும்.

ஆக, என்னையும், என் சக மனிதர்களையும் தாண்டி என் ஆண்டவரில் நான் நம்பிக்கைகொள்ளும்போது என் ஆற்றல் பெருகுகிறது.

இன்று நாம் எண்ணிப்பார்ப்போம்?

நான் எப்போதெல்லாம் உடல், மூளை, மனம், ஆன்ம சோர்வடைகிறேன்?

இச்சோர்விலிருந்து வெளிவர நான் தேடும் மனிதர்கள் யார்?

அம்மனிதர்கள் தர முடியாத ஆற்றலை என் இறைவன் தருகிறார் என்ற நம்பிக்கையும், அனுபவமும் எனக்கு உண்டா?

அவர் அளிக்கும் ஓய்வையும், இளைப்பாறுதலையும் நான் அடையத் தடையாக இருப்பவை எவை?

என் கால்களில் நானே சங்கிலிகளைக் கட்டிக்கொண்டு, என் முதுகில் மணல் மூடையை ஏற்றிக்கொண்டு, 'எனக்கு சோர்வாக இருக்கிறது' என ஏன் புலம்புகின்றேன்? நான் அவிழ்க்க வேண்டிய சங்கிலி எது? நான் இறக்கிவைக்க வேண்டிய மணல்மூடை எது?


Monday, December 9, 2019

தொலைந்து போனவர்கள்

இன்றைய (10 டிசம்பர் 2019) முதல் வாசகம் (எசாயா 40:1-11)

தொலைந்து போனவர்கள்

2005ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி வெளிவந்த இணையதளச் செய்தி: 'பைஜாமா அணிந்து ஒரு மனிதர் இறந்து கிடந்தார்.' ஒருவர் இறக்கிறார் என்றால் அவர் தன்னுடைய வீட்டில் உறவினர்கள் சூழ்ந்து நிற்க இறந்து போயிருக்கலாம். அல்லது மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இறந்திருக்கலாம். ஆனால், இந்த மனிதர் இறந்து கிடந்தது அடுக்குமாடிக்கட்டிடம் ஒன்றின் 12வது மாடியில். இந்த அடுக்குமாடிக்கட்டிடத்தை இடிக்க நபர்கள் சென்றபோது ஒரு மனிதர் அவருடைய அறையில் இறந்து கிடப்பதைக் காண்கிறார்கள். அவர் அருகில் உள்ள மேசையில் இருந்த காலண்டர் 1985ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி என்று காட்டுகிறது. அங்கே விரிக்கப்பட்டிருந்த டைரியிலும் அதே தேதிதான் இருந்தது. இறந்துகிடந்தது ஒரு நபர் அல்ல. ஒரு எலும்புக்கூடு பைஜாமா அணிந்து படுத்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இறந்து எலும்புக்கூடாய் மாறியிருக்கிறார். யாரும் அவரைத் தேடவில்லை. டோக்யோ மாநகரம் தொழில்நுட்பத்தில் மிக முன்னேறிய நகரம். யார் எங்கே இருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை யாரும் கண்டுபிடித்துவிட முடியும். பைஜாமாவில் இறந்து கிடந்த நபர் நமக்கு நிறையக் கேள்விகளை வைக்கின்றார்:

20 வருடங்களாக இவரை யாருமே தேடவில்லையா?

இவருக்கென்று நண்பர்கள் கிடையாதா?

யாரும் தேவையில்லை என்று இவர் முடிவெடுத்து தன்னையே தனிமைப்படுத்தக் காரணம் என்ன?

மற்றவர்களின் பார்வையிலிருந்து இவர் தொலைந்துபோனாரா?

'ஓடும் ஆறு' என்ற நூலில் இந்நிகழ்வைப் பதிவு செய்கிறார் பவுலோ கோயலோ.

இன்றைய முதல் வாசகத்திலும் நற்செய்தி வாசகத்திலும் 'ஆயன் தன் மந்தையைத் தேடும்' உருவகம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

நம்முடைய ஃபோனில் நமக்கு 'தவறிய அழைப்புகள்' - 'மிஸ்ட் கால்ஸ்' இருக்கும்போது நம்மில் தோன்றும் உணர்வு என்ன? சில எண்கள் நமக்கு எரிச்சலைத் தந்தாலும், சில எண்கள் நமக்கு ஆர்வத்தைத் தூண்டினாலும், ஒட்டுமொத்தமாக நம்மை யாரோ தேடியிருக்கிறார்கள் என்பதையே 'தவறிய அழைப்புகள்' நமக்குக் காட்டுகின்றன.

தன் மந்தையிலிருந்து தவறியவர்களை அழைக்கிறார் கடவுள்.

இன்றைய முதல் வாசகத்தின் பின்புலம் பாபிலோனியப் படையெடுப்பு. பாபிலோனியப் படையெடுப்பில், அங்கே நாடுகடத்தப்பட்டு திக்கற்றவர்களாய் நின்ற மக்களைத் தம்மிடம் அழைக்கின்ற கடவுள், 'ஆறுதல் கூறுங்கள். என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்' என்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் தேடுதல் மூன்று நிலைகளில் இருக்கின்றது:

அ. ஆயனைப் போல தம் மந்தையை அவர் மேய்ப்பார்

கூலிக்காரன் மேய்ப்பதற்கும் ஆயன் மேய்ப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. கூலிக்காரன் மந்தையை ஒரு பொருளாகப் பார்ப்பான். ஆயன் அதை உயிராகப் பார்ப்பார். ஆபத்து என்று வரும்போது கூலிக்காரன் தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள முனைவான். ஆயனோ மந்தையின் நலனுக்காக தன் உயிரையும் இழக்கத் துணிவார். கூலிக்காரன் மந்தையோடு இருக்கும் தன்னுடைய உடனிருப்பை பணமாகப் பார்ப்பான். ஆயன் அப்படிப் பார்ப்பது இல்லை.

ஆ. ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்

ஆட்சி செலுத்துகின்ற ஆண்டவரின் கை இங்கே இளம் பிஞ்சு ஆடுகளை அரவணைக்கிறது. ஆட்டுக்குட்டிகளை வழக்கமாக ஆயன் தன்னுடைய கோல் அல்லது குச்சியைக் கொண்டே ஒன்று சேர்ப்பார். குட்டி ஆடுகளை ஒன்று சேர்க்க கைகளைப் பயன்படுத்த வேண்டுமானால் ஆயன் குனிய வேண்டியிருக்கும். ஆண்டவர் என்னும் ஆயன் தன் குட்டிகளைப் பயமுறுத்தும் கோலை விடுத்துத் தன் கைகளால் அரவணைத்துக்கொள்ள குனிகின்றார். அவருக்கு வலித்தாலும்!

இ. சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்

மற்ற மந்தையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடக்க முடியாத சினையாடுகளின்மேல் சிறப்பான கவனம் செலுத்துகிறார் ஆயன். மேலும், சினையாடுகளே ஓநாய்களின் பாய்ச்சலுக்கு ஆளாபவை. ஆனால், அவற்றின்மேல் சிறப்பான கவனம் செலுத்துவதன் வழியாக அவைகளைப் பாதுகாக்கிறார் ஆண்டவர் என்னும் ஆயன்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 99 ஆடுகளை விட காணாமற்போன ஓர் ஆட்டை மதிப்பானதாகக் கருதுகிறார் ஆயன்.

இவை சொல்வது ஒன்றேதான்.

நாம் நம் வாழ்வில் தொலைந்துபோகும் தருணங்களில் ஆண்டவர் நம்மைத் தேடுகின்றார்.

அன்றாட வாழ்வில் தொலைந்துபோகும் நம் சகோதர, சகோதரிகளை நாம் தேடினால் நாமும் ஆயர்களே!


Sunday, December 8, 2019

தூய்மை நிலையும் நோக்கும்

இன்று கன்னி மரியாளின் அமல உற்பவத்திருநாளைக் கொண்டாடுகிறோம்.

பிரான்சு நாட்டில் லூர்து நகரில் தன்னை வெளிப்படுத்திய மரியாள், 'நாமே அமல உற்பவம்' என்று தன்னை வெளிப்படுத்துகின்றார்.

'அன்னை மரியாள் பிறப்பின்போதே பாவ மாசு இன்றிப் பிறந்தார்' - இதுதான் அமல உற்பவ நம்பிக்கைக் கோட்பாட்டின் பொருள்.

கடவுள் மரியாளின் வாழ்க்கை வகுத்த திட்டமே அமல உற்பவம்.

இன்று நாம் நம்முடைய வாழ்விற்கு நிறையத் திட்டங்களைத் தீட்டுகிறோம். ஆனால், நம்முடைய வாழ்விற்கென்று கடவுள் ஒரு நோக்கத்தை வைத்திருக்கின்றார். நோக்கம் தெளிவாகிவிட்டால் நம்முடைய திட்டம் கூர்மைப்படுத்தப்படும்.

இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 1:3-6,11-12), பவுல், 'நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் கிறிஸ்து வழியாக நம்மைத் தேர்ந்தெடுத்தார்' என்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 3:9-15,20) படைப்பின் தொடக்கத்தில் நம்முடைய முதற்பெற்றோர் தவறியபோது, அவர்களைக் கண்டிக்கின்ற கடவுள், அவர்களுடைய வாழ்வியல் வரைபடத்தையும் கொடுக்கின்றார்.

மரியாளின் அமல உற்பவம் அவருடைய வாழ்வின் நிலையையும் நோக்கத்தையும் நமக்குச் சொல்கிறது.