Tuesday, September 12, 2017

இரண்டும் மதிப்பு மிக்கதே

லியோ டால்ஸ்டாய் அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு.

ஒருநாள் மாலை தன் நண்பர் ஒருவரைச் சந்தித்துவிட்டு வீடு திரும்புகிறார் டால்ஸ்டாய். இவரின் வீட்டிற்கு அருகில் சிறுமி ஒருத்தி விளையாடிக்கொண்டிருக்கிறார்.

'நானும் உன்னுடன் விளையாட வரவா?' எனக் கேட்கிறார் டால்ஸ்டாய்.

'வா' என்கிறார் சிறுமி.

விளையாண்டு முடித்தவுடன் சிறுமிடம் டால்ஸ்டாய், 'நீ இன்று உன் அம்மாவிடம் போய், 'டால்ஸ்டாயுடன் நான் விளையாண்டேன்' எனச் சொல்' என்றார்.

டால்ஸ்டாய் ஒரு பெரிய எழுத்தாளராக அறியப்பட்ட நேரம் அது.

சிறுமி மறுமொழியாக, 'நீயும் போய் உன் அம்மாவிடம் 'நான் அன்னாவுடன் விளையாண்டேன்!' என்று சொல்' எனச் சொல்லிவிட்டு துள்ளிக் குதித்து தன் வீடு நோக்கி ஓடினாள்.

டால்ஸ்டாய் சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

நிற்க.

பெருமை அல்லது மதிப்பு அல்லது உயர்நிலை என்பது எல்லாருக்கும் உரியது என்றும், ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் ஒரு மதிப்பு இருக்கிறது என்பதையும் ஒரு நொடியில் உணர்த்திவிட்டார் அன்னா என்ற சிறுமி.

ஆக, மதிப்பு அல்லது தன்மதிப்பு என்பது எல்லாருக்குமான ஒரு கொடை.

இதை நாம் சிலரில் பார்த்து வியப்பதும், மற்றவரில் பார்க்காமல் சிரிப்பதும் தவறு.

ஒரு மருத்துவர் இதய அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார் எனப் பாராட்டும் நம்மால், ஒரு விவசாயி அழகாக பாத்தி கட்டுவதையோ, முடிவெட்டுபவர் அழகாக முடிவெட்டுவதையோ பாராட்ட முடிவதில்லை. இதயச் சிகிச்சை செய்யும் மருத்துவரால் முடிவெட்ட முடியாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பணியில் திறமை உண்டு.

'நீங்க டிவி முன்னால் இருந்து பார்ப்பவராக இருக்கக்கூடாது. டிவிக்குப் பின்னால், டிவியில் தோன்றுபவராக இருக்க வேண்டும்!' என யூ டியுபில் ஒருவர் உயிரைக் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தார்.

சரி பாஸ்.

டிவி முன்னால உட்கார்ந்திருக்கிறதால என்ன மதிப்பு குறைஞ்சிடுச்சு?

அல்லது டிவியில வந்ததால என்ன மதிப்பு கூடிடுச்சு?

நாளை நாம் வாசிக்கும் நற்செய்தியிலும் இந்த கருத்தைத்தான் பார்க்கிறோம்.

லூக்கா நற்செய்தியாளரின் சமவெளிப் பொழிவு இது.

'ஏழைகள், பட்டினி கிடப்போர், அழுதுகொண்டிருப்போர், இகழ்ந்து தள்ளப்படுவோர்' ஒருபுறம். 'செல்வர்கள், உண்டு கொழுத்திருப்போர், சிரித்து இன்புறுவோர், புகழ்ந்து வாழ்த்தப்படுவோர்' மறுபுறம்.

இந்த இரண்டு புறங்களில் ஒன்று மேற்புறமோ, மற்றது அடிப்புறமோ இல்லை.

இரண்டும் மதிப்பு மிக்கதே!

2 comments:

  1. ஒரு சாதாரண சிறுமி அன்னாவைக்கொண்டு " பெருமை அல்லது மதிப்பு எல்லோருக்கும் உரியது" என்பதை எழுத்தாளர் டால்ஸ்டாய்க்கு மட்டுமல்ல, நமக்கும் எடுத்துக்கூறியிருப்பது அழகான விஷயம்.அதை அத்தோடு விட்டுவிடாமல் நாளைய நற்செய்தியோடு இணைத்திருப்பது தந்தையின் சாமர்த்தியம். பட்டினி நிமித்தம் அழுதுகொண்டிருப்போராயினும்,உண்டு கொழுத்து சிரித்துக்கொண்டிருப்போராயினும் இரு சாராரும் மதிப்புக்குரியவர்களே! என்பது கேட்போருக்கு மகிழ்வூட்டும் செய்தி.அதாவது நம்மை யாரென்று வெளிப்படுத்துவது நமது 'புறமல்ல; அகமே!' என்பதை அழகாக வெளிப்படுத்தியிருக்கும் ஒரு பதிவு. புரிந்த ஒன்றைக்கொண்டு புரியாத ஒன்றிற்கு நம்மை வெகு இலாவகமாக இட்டுச்செல்லும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Gud explaination fr.thanks

    ReplyDelete