ரிச்சர்ட் கார்ல்ஸன் அவர்கள் எழுதிய, 'நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் எந்த நிலையிலும்' (யூ கேன் பி ஹேப்பி நோ மேட்டர் வாட்) என்ற நூலில் யூரிபிடஸ் என்ற மெய்யியலாளர் மற்றும் வரலாற்று அறிஞரின் வார்த்தை ஒன்றை மேற்கோள் காட்டியிருக்கின்றார்: 'இரண்டாம் எண்ணங்கள் எப்போதும் ஞானம் மிக்கவை' ('Second Thoughts are Ever Wiser').
நாங்கள் குருமாணவர்களாக ஆன்மீகப் பயிற்சி ஆண்டில் இருந்தபோது சொல்லிக்கொடுக்கப்பட்ட பல தியானப் பயிற்சிகளில் ஒன்று, 'எண்ணங்களைத் துரத்துவது.' அதாவது, நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். கண்களை மெதுவாக மூடிக்கொள்ள வேண்டும். நம் சிந்தனையை நம் சிந்தனைகளில் பதிவு செய்ய வேண்டும். அதாவது இந்த நொடியில் என்ன யோசிக்கிறேன் என்று யோசிக்க வேண்டும். தான் யோசிப்பதையே யோசிக்கக்கூடிய உயிரினம் மனித உயிரினம் மட்டும்தானே! (யாருக்குத் தெரியும்?!) அப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு நிமிடத்தில் அதாவது 60 நொடிகளில் நாம் 200 முதல் 300 விஷயங்கள் பற்றிச் சிந்திக்கிறோம். ஆச்சர்யமாக இருக்கிறது. இவற்றில் எந்த எண்ணம் உண்மை எந்த எண்ணம் பொய் என்பதெல்லாம் கிடையாது. எல்லாமே எண்ணங்கள்தாம். எல்லாமே நம் உள்ளத்தில் தோன்றி மறைபவைதாம். 'வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளது அனையது உயர்வு' என்கிறது திருக்குறள். எண்ணங்களின் ஊற்றும், உறைவிடமும் உள்ளமே. 'எண்ணம்போல் வாழ்வு' என்று பல தியான மையங்களில் சொல்லப்படுகிறது.
நம் எண்ணங்கள் இயல்பாகவே மாறக்கூடியவை என்பது ஒருபுறம்.
நம் எண்ணங்களை நாமாக மாற்ற முடியும் என்பது மறுபுறம்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு இந்த இரண்டாம் புறத்தைப்பற்றியதாக இருக்கிறது.
எண்ணங்களை நாமாக மாற்றுவது என்றால் எப்படி?
இந்தியா முழுக்க ஜியோ சிம்மையும், ஃபோனையும் அறிமுகப்படுத்தி எல்லாரையும் தன் உள்ளங்கைக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறது ரிலையன்ஸ் கம்பெனி. ரிலையன்ஸ் கம்பெனி சிம்மைப் பயன்படுத்திய ஒரு கசப்பான அனுபவத்தால் இன்றுவரை ரிலையன்ஸ் என்ற பெயரைக் கேட்டாலே கடுப்பாகிவிடுகிறது. என் நட்பு வட்டாரத்தில் பலர், 'நீயும் ஜியோ சிம் வாங்கிக்கொள்ளலாமே! ஒரு நாளைக்கு ஒரு ஜிபி இலவசம்!' என்று ரெகமன்டேஷன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு ஜிபி எனக் கொடுப்பதை உறுதி செய்யும் நம் இந்திய அரசால் ஒரு நாளைக்கு ஒரு கிலோ அரிசியை நமக்கு உறுதி செய்ய முடியவில்லை என்பதுதான் வெட்கக்கேடு. ஸ்மார்ட்ஃபோன் நம் பசியாற்றாது என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்? நேற்றைய தினம் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைக்குச் சென்றபோது என்னை அறியாமல் ரிலையன்ஸ் ஜியோ மேல் ஒரு ஈர்ப்பு. இதை வாங்கி அலுவலகத்தில் வைத்தால் நிறைய ஃபோன் பில்லைக் குறைத்துவிடலாம் என மனம் எப்படி எப்படியோ கணக்குப் போட்டது. ஏறக்குறைய அதை விற்பனை செய்பவரின் அருகில் சென்றுவிட்டேன். 'ஜியோ சிம் எடுக்குறீங்களா சார்?' எனக்கேட்டார் விற்பனையாளர். 'இல்லை. சும்மா பார்க்க வந்தேன்' என்று சொல்லிவிட்டு இடம் பெயர்ந்தேன். ஒரு பொருளைக் குறித்த எண்ணம் சில நாள்களில் நமக்கு மாறிவிடுகிறது.
அதே போலவே ஆள்களைப் பற்றிய எண்ணங்களும் மாறுகின்றன. 'அவனை நான் என்னவோ மோசமானவன்னு நினைச்சேன். ஆனா அவன் நல்லவன்' என்றும், 'அவனை எவ்வளவு நல்லவன்னு நினைச்சேன். ஆனா அவன் இவ்வளவு மோசமானவனா' என்றும் பிறரைப் பற்றிய நம் எண்ண ஓட்டங்கள் மாறியிருப்பதை நாமே உணர்ந்திருக்கிறோம். அல்லது கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆக, எண்ணங்கள் மாறக்கூடியவை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு (காண். மத் 21:28-32) முந்தைய பகுதியில் இயேசுவின் அதிகாரம் கேள்விக்குட்படுத்தப்படுகிறது. இயேசு தன் அதிகாரம் மற்றும் ஆற்றலின் இரகசியத்தை பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், மற்றும் கேள்வி கேட்டவர்களோடு பகிர்ந்து கொண்டாலும் அவர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்வதாக இல்லை. இந்தப் பின்புலத்தில்தான்,
'இந்த நிகழ்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று 'இரு புதல்வர்கள் உவமையை' சொல்கிறார் இயேசு. இந்த உவமை விண்ணரசு பற்றியது அன்று. இதற்குப் பின் வரும் திராட்சைத் தோட்ட குத்தகைதாரர்கள் உவமை விண்ணரசு பற்றியது. மேலும் இந்த உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. வழக்கமாக 'இரு புதல்வர்கள்' எடுத்துக்காட்டுக்களில் 'இளையவர் சிறப்பானவராகவும், மூத்தவர் கண்டிக்கத்தக்கவராகவும் சித்திரிக்கப்படுவார்' (எ.கா. ஊதாரி மைந்தன் உவமை). ஆனால் இங்கே சற்றே வித்தியாசமாக, 'மூத்தவர் நல்லவராகவும் இளையவர் கண்டிக்கத்தக்கவராகவும்' சித்தரிக்கப்படுகின்றனர்.
இந்த உவமையை இரண்டு உரையாடல்களாகப் பிரிக்கலாம்.
அ. தந்தை மற்றும் மூத்த மகன்
இங்கே தந்தை தன் மகனை, 'மகனே' என அழைக்கிறார். 'நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்ற கட்டளையை மகனுக்குத் தருகின்றார் தந்தை. மகன், 'நான் போக விரும்பவில்லை' என்கிறான். இங்கே நன்றாகக் கவனிக்க வேண்டும். 'நான் போகவில்லை' என்று சொல்லவில்லை மகன். மாறாக, 'போவதற்கான விருப்பம்கூட இல்லை' என்கிறான் மகன். அதாவது, 'பொருள்காட்சி போகவில்லை' என்று சொல்வதைவிட, 'பொருள்காட்சி போக வேண்டும் என்ற விருப்பம்கூட இல்லை' என்கிறான் மகன்.
ஆ. தந்தை மற்றும் இளைய மகன்
இளைய மகனும், மூத்த மகனும் ஒரே வீட்டில் அல்லது ஒரே இடத்தில் இருந்தார்களா அல்லது அவர்களுக்கிடையே இட இடைவெளி இருந்ததா என்பது நமக்குத் தெரியவில்லை. மூத்தவனிடம் சென்ற தந்தை இளையவனிடமும் செல்கின்றார். இங்கே அவர் என்ன சொன்னார் என்பது பதிவு செய்யப்படவில்லை. 'அப்படியே சொன்னார்' என பதிவு செய்கிறார் மத்தேயு. 'மகனே' என்று சொன்னாரா என்பதும் தெரியவில்லை. ஆனால், இளைய மகனது பதில், 'நான் போகிறேன் ஐயா' என்று இருக்கிறது. மூத்த மகன் தன் தந்தையை 'ஐயா' 'ஆண்டவரே' என்று அழைக்கவில்லை. ஆனால் இரண்டாம் மகன் வாய்நிறைய அழைக்கிறான்.
உரையாடல் முற்றுப்பெற்றுவிட்டது.
இப்போ திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்கு யார் சென்றார் என்பதையும் சொல்கின்றார் இயேசு. மூத்தவன் தன் மனத்தை மாற்றி;க்கொண்டு திராட்சைத் தோட்டத்துக்குச் செல்கிறான் இளையவனும் தன் மனத்தை மாற்றிக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிடுகிறான்.
மூத்தவனின் உள்ளத்து மாற்றம் அவனைத் தந்தைக்கும், திராட்சைத் தோட்டத்திற்கும் நெருக்கமாக்குகிறது.
இளையவனின் உள்ளத்து மாற்றம் அவனைத் தந்தைக்கும், திராட்சைத் தோட்டத்திற்கும் அந்நியமாக்குகிறது.
இந்தக் கதையை உடனே அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்கின்றார் இயேசு. 'வரிதண்டுவோரும், மகளிரும்' 'மூத்தவன்' எனவும், 'யூதர்களும், மறைநூல் அறிஞர்களும்' 'இளையவன்' எனவும், இரண்டாமவர்கள் யோவானின் நீதிநெறிக்கும் செவிமடுக்கவில்லை, முன்னவர்களின் செயல்களைக் கண்டும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்கிறார் இயேசு.
ஆக, எண்ணங்களை மாற்றிக்கொள்வது - நல்லதுக்காக என்றால் - அதில் தவறில்லை.
'எண்ணங்களை மாற்றும்போது நம்பிக்கை பிறக்கிறது' என்பது இயேசு சொல்லும் பாடம்.
ஒருவேளை தந்தை மாலையில் வீட்டிற்கு வந்து இரண்டு மகன்களையும் சந்திக்கிறார் என வைத்துக்கொள்வோம். மூத்தமகன் அவரிடம் தான் செய்த வேலை பற்றியும், தோட்டத்து தொழிலாளர்கள் நிலை பற்றியும், தோட்டத்தின் நிலை பற்றியும் பகிர்ந்து கொள்வான். இளைய மகனோ தான் வர முடியாமல் போனதற்காக சாக்குப் போக்குகளை, காரணங்களைப் பட்டியலிடுவான்.
இன்று நாம் பல நேரங்களில் நம் வேலைகளைச் செய்து முடிப்பதற்குப் பதிலாக, அதைச் செய்யாமல் இருந்ததற்கான சாக்குப் போக்குகளைக் கண்டுபிடிக்கிறோம்.
இப்படிப்பட்ட ஒரு நிலைதான் இன்றைய முதல் வாசகத்தில் (எசே 18:25-28) இருக்கிறது.
பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். இவர்கள் தங்களின் இந்த நிலைக்குக் காரணம் தங்களின் மூதாதையரின் பாவம் என்றும் தாங்கள் இயல்பிலேயே குற்றமற்றவர் என்று எண்ணிக்கொண்டு, 'கடவுள் நேர்மையற்றவர். அவர் நம் முன்னோர்களின் பாவங்களுக்காக நம்மைத் தண்டித்துவிட்டார். அவர்களின் குற்றப்பழியை நம்மேல் சுமத்திவிட்டார்' என்று கடவுளின்மேல் குற்றம் சுமத்துகின்றனர். இவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு கடவுள் தரும் விடையே இன்றைய முதல்வாசகம்.
'இஸ்ரயேல் வீட்டாரே, கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை' என்று சாடிவிட்டு, 'அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால் அவர்கள் வாழ்வர்' என்கிறார் ஆண்டவராகிய கடவுள். அதாவது, தங்களின் எண்ணத்தை மாற்றவேண்டும் இஸ்ரயேல் மக்கள். இந்த எண்ண மாற்றமே உண்மையைக் கண்டுணர்தல். இந்த மாற்றம் நிகழாதவரை என்ன நடக்கும்? இஸ்ரயேல் மக்கள் தங்கள் செயல்கள் சரி என்று நிரூபிக்கக் காரணங்கள் அல்லது சாக்கு போக்குகள் தேடிக்கொண்டிருப்பர்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (பிலி 2:1-11) பிலிப்பு நகர திருச்சபைக்கான மடலில் தன் அறிவுரையைத் தொடரும் பவுலடியார் அவர்களிடையே விளங்கிய 'கட்சி மனப்பான்மை' மற்றும் 'வீண்பெருமை' ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, 'அவர்கள் தாழ்மையோடும், தன்னலமற்றவர்களாயும் இருக்க வேண்டும்' என அறிவுறுத்தும் பவுல், 'கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!' என அடிக்கோடிடுகின்றார். அதாவது, அவர்கள் கொண்டிருக்கிற எண்ணம் மாற்றம் பெற்று அது கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையாக மாற வேண்டும். அந்த மனநிலை என்ன என்பது ஒரு கிறிஸ்தியல் பாடல் வழியாகத் தெளிவுபடுத்துகின்றார் பவுல்.
ஏற்கனவே தாங்கள் கொண்டிருக்கின்ற மேட்டிமை அல்லது உயர்வு மனப்பான்மை உணர்வை பிலிப்பு நகர திருச்சைபயினர் மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் மாற்றாதபோது தங்கள் உணர்வுகள் மற்றும் செயல்களை நியாயப்படுத்த அவர்கள் சாக்குப் போக்குகளைக் கண்டுபிடிப்பார்கள்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?
1. கொஞ்சம் நீட்டிப் பார்ப்போம்
இன்றைய நற்செய்தியில் வரும் 'இரு புதல்வர் உவமையை' கொஞ்சம் முன்னும், பின்னும் நீட்டித்துக் கற்பனை செய்து பார்ப்போம். ஒரு அப்பாவிற்கு நான்கு மகன்கள் இருந்தனர்: எல்லாரையும் ஒன்றாக அழைத்து, 'நீங்கள் என் தோட்டத்திற்கு வேலைக்குப் போங்கள்!' என்கிறார். மகன் 1 'போகிறேன்' என்று சொல்லவுமில்லை. போகவுமில்லை. மகன் 2 'போகிறேன்' என்று சொல்கிறான். ஆனால் போகவில்லை. மகன் 3 'போகிறேன்' என்று சொல்லவில்லை. ஆனால் போகிறான். மகன் 4 'போகிறேன்' என்று சொல்கிறான். போகிறான். முதல் நிலை 'கண்டுகொள்ளாத நிலை'. இரண்டாம் நிலை 'ஏமாற்று நிலை'. மூன்றாம் நிலை 'பின்புத்தி மனநிலை'. நான்காம் நிலை 'உண்மை மனநிலை'. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மனிதர்கள் தாம் இன்றைய நற்செய்தியில் வரும் மூத்த மற்றும் இளைய மகன்கள். மூத்த மகனுக்கு முதலில் போக விருப்பமில்லை தான். ஆனால் தன் தந்தையின் பேரன்பையும், தாராள உள்ளத்தையும் எண்ணிப்பார்த்து 'சரி! அவருக்காகவாவது போவோம்!' என நினைத்திருக்கலாம். அல்லது 'இந்த வேலையைச் செய்யவில்லையென்றால் வேறு வேலை ஏதாவது கொடுத்து விடுவார். எப்படியோ தப்பித்து ஓடி செய்து விடுவோம்' என நினைத்திருக்கலாம். அல்லது 'இவர் பேச்சைக் கேட்கவில்லையென்றால் நாளைக்கு ஏதாவது தண்டனை கொடுப்பாரோ' என்று பயத்தில் சென்றிருக்கலாம். காரணம் உவமையில் இல்லை. வாசகர்தான் கற்பனை செய்து கொள்ள வேண்டும். இளைய மகன் 'ஏமாற்றினான்' என்று நாம் குற்றம் சாட்ட வேண்டாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் அவனால் தன் தந்தைக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. இந்த இரண்டு மகன்களின் மனநிலைகள் இரண்டுமே 'பொய் மனநிலைகள்' தாம். உண்மையான மனநிலை 'நான்காவது மகன்' மனநிலை. அத்தகைய மனநிலையைத்தான் திருமுழுக்கு யோவான், அன்னை மரியாள், மற்றும் இயேசு ஆகியோர் கொண்டிருந்தனர். 'செய்கிறேன்' என்று சொன்னார்கள். அதையே செய்து முடித்தார்கள்.
இன்று இயேசுவின் நம் அன்றாட அழைப்பிற்கு நம் பதில் இந்த நான்கில் எப்படி இருக்கிறது?
இயேசுவை விட்டுவிடுவோம்.வாழ்க்கை அல்லது உலகம் என்பது ஒரு திராட்சைத் தோட்டம். வாழ்வு என்னும் கொடையை தந்தையாகிய கடவுள் நமக்குக் கொடுத்து இங்கே அனுப்பியிருக்கிறார். அந்த வாழ்வு என்னும் அழைப்பிற்கு நாம் எப்படி பதில் சொல்கிறோம். மகன் 1 போல 'கண்டுகொள்ளாமல்' இருக்கிறோமா? மகன் 2 போல 'ஏமாற்று' மனநிலை கொள்கிறோமா? மகன் 3 போல 'பின்புத்தி மனநிலையில்' பயத்தால் வாழ்வை வாழ்கிறோமா? அல்லது மகன் 4 போல 'சொல்வதைச் செய்பவர்களாகவும், செய்வதைச் சொல்பவர்களாகவும்' இருக்கின்றோமா? மகன் 4க்குரிய மனநிலையை நாம் பெற வேண்டுமெனில் நல்ல முடிவெடுக்கும் திறனும், முடிவெடுத்தபின் மனதை மாற்றாத திடமும், எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் விடாமுயற்சியும் அவசியம். இந்த மூன்றில் ஒன்று குறைந்தால் கூட நாம் உண்மையிலிருந்து தவறி விடுவோம்.
2. எண்ணங்களை மாற்றும்போது நம்பிக்கை பிறக்கிறது
இயேசுவின் சமகாலத்து எதிரிகள் அவர்மேல் நம்பிக்கை கொள்ள முடியாமல்போனதற்கான காரணம் அவர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்பதுதான். இந்த எண்ணமாற்றம் ஒன்று தானாக நடக்க வேண்டும். அல்லது மற்றவர்களின் முன்மாதிரியைக் கண்டு நடக்க வேண்டும். இவர்களுக்கு இந்த இரண்டு மாற்றங்களுமே இல்லை.
இன்று கடவுளை நம்புவதற்கு எனக்கு என்ன எண்ண மாற்றம் தேவையானதாக இருக்கிறது?
அல்லது எனக்கும் மற்றவருக்கும் இருக்கும் உள்ள உறவில் அவரை நம்புவதற்குத் தேவையான என் எண்ண மாற்றம் என்ன?
3. 'வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை'
'கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.' அதாவது, மற்றொன்றைப் பிடிக்க வேண்டுமென்றால் ஒருவர் தான் ஏற்கனவே பற்றிக்கொண்டிருக்கும் ஒன்றை விட வேண்டும். இயேசு அப்படித்தான் செய்கின்றார். தன் மனுவுரு ஏற்றல் என்பதைப் பற்றிக்கொள்வதற்காக தான் கொண்டிருக்கின்ற கடவுள் தன்மை என்ற பற்றை விடுகின்றார். இன்று நாம் சாக்குப் போக்குச் சொல்வதற்கும், எண்ண மாற்றம் அடைவதற்கும் தடையாக இருப்பது 'வலிந்து பற்றிக்கொள்வதுதான்.' சில நேரங்களில் தவறு என்று தெரிந்தாலும் நம் உயர்வு மனப்பான்மை அல்லது மேட்டிமை உணர்வுக்காக நாம் அவற்றை விட்டுவிடுவதில்லை.
4. வாக்கிங் தி எக்ஸ்டரா மைல்.
நம் வாழ்வின் வெற்றிக்கும், நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம் இதுதான். நம்மிடம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகச் செய்வது. நான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என வைத்துக்கொள்வோம். என்னிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன? பயணி விரும்பும் இடத்தில் அதற்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டு அங்கே சென்று அவரை நான் இறக்கி விட வேண்டும். இதையும் விட அதிகமாகச் செய்வது என்றால் என்ன? 'அவரின் உடைமைகளை ஆட்டோவில் இருந்த இறக்க உதவுவது. 'பத்திரமாய்ப் போய்வாங்க!' என்று கனிவுமொழி சொல்வது. 'பயணம் சௌகரியமாக இருந்ததா?' எனக் கேட்பது. இப்படிச் செய்வதால் என்னிடம் ஒன்றும் குறையப்போவதில்லை. ஆனால் அது எனக்கும் என் பயனாளருக்கும் மகிழ்ச்சி தருகிறது. உவமையில் வரும் மூத்த மகன் சொல் அளவில் மட்டும் தாராள உள்ளம் காட்டுகிறான். ஆனால் அவனிடம் செயல் இல்லை. மற்றவன் செயல்படுகிறான். ஆனால் செயல்பாடு தயக்கத்தோடு தொடங்குகிறது. வாழ்வதிலும், நம் உறவு நிலைகளிலும் நம்மிடம் எதிர்பார்ப்பதையும் விட கொஞ்சம் அதிகமாகச் செய்து பார்க்கலாமே?
5. எதிர்பாராத அழைப்பு
இரண்டு மகன்களுக்குமே அழைப்பு எதிர்பாராத நேரத்தில் தான் வருகிறது. அவர்கள் தயாராக இல்லாததால் ஒருவேளை அழைப்பிற்கு பதில் தரமுடியாமல் போயிருந்திருக்கலாம். நான் பணி செய்த ரோம் நகர் பங்கில் ஒருவர் இருக்கிறார். எப்போது கூப்பிட்டாலும் வருவார். காலையில் வேளைக்குச் செல்வார். மதியம் மாணவர்களுக்கு கிட்டார் சொல்லிக் கொடுப்பார். மாலையில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் முதியவர்களுக்கு பால் மற்றும் உணவுப்பொருட்கள் வாங்கிக் கொண்டு போய்க் கொடுப்பார். எங்க ஏரியாவிற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தால் அவரும் உடனடியாக அங்கே வந்து விடுவார். பிக்னிக்குக்கு பஸ் ஏற்பாடு செய்வார். பீட்சா வாங்கி வருவார். பார்ட்டி முடிந்ததும் அவரே அனைத்தையும் சுத்தம் செய்வார். ஒருநாள் அவரிடம் உங்களால் எப்படி இதெல்லாம் முடிகிறது எனக் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்: 'பைபளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்ன தெரியுமா? கழுதைக் குட்டி. 'ஆண்டவருக்குத் தேவை' என்று எருசலேம் தெரு ஒன்றில் காத்துக் கொண்டே இருக்கிறது. நானும் ஒரு கழுதைக் குட்டிதான். எந்த நேரத்தில் யாருக்கு என்ன தேவையோ நான் ஓடிவிடுவேன். 'அவர்கள் உன்னைப் பயன்படுத்துகிறார்கள்!' என்று உள்மனம் என்னை பின்னடையச் செய்யும். 'அப்படியாவது நான் பயன்படட்டுமே!' என்று எதையும் பொருட்படுத்தாமல் ஓடி உதவி செய்வேன';. தயார்நிலையே வாழ்வின் வெற்றி நிலை.
இறுதியாக, 'முக்கியமில்லாத ஒன்றிற்கு நீ 'ஆம்' என்று சொல்லும்போதெல்லாம், முக்கியமான ஒன்றுக்கு நீ 'இல்லை' என்று சொல்கிறாய்' என்கிறது மேலாண்மையியல்.
முக்கியமில்லாதவற்றிலிருந்து முக்கியமானதிற்கு என் 'ஆம்' திரும்பினால், என் மாற்றமே எண்ண மாற்றமே!