'அவனுடைய குரல் கேட்கவும் பெண்கள் சட்டென அமைதியானார்கள். அவனை உற்றுப் பார்த்துக்கொண்டு ஒருத்தி கேட்டாள், 'ஒகுர்ரா அதி ... ஓ ... கூள மாதாரி ...''
நிற்க.
கடந்த வெள்ளிக்கிழமை சென்னையை நோக்கிய ரயில் பயணத்தில் பெருமாள்முருகன் அவர்கள் எழுதிய 'கூளமாதாரி' என்னும் நாவலை வாசித்து முடித்தேன்.
நான் குருமடத்தில் சேருவதற்கு முன் (ஏறக்குறைய 13 வயது) வாழ்ந்த என் ஊராகிய நத்தம்பட்டியில், பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போதெல்லாம் கந்தன் என்ற அண்ணனும் ஊமையன் என்ற அண்ணனும் ஆடுகளை மேய்ச்சலுக்குப் பத்திக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன். சத்திரப்பட்டியிலிருந்து வீட்டிற்குத் திரும்பும்போதும் நாயக்கர் தோட்டத்திலும் பொற்றாக்குளத்திலும் ஆட்டுப்பட்டி போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். நான் அன்று கண்டதை மீண்டும் 26 வருடங்களுக்குப் பின் என் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது இந்த நாவல்.
இந்த நாவலின் கதாநாயகன் கூளையன். இவன் ஆடுமேய்ப்பவன். இவனுடன் ஆடுமேய்ப்பவர்கள் நெடும்பன், மொண்டி, வவுரி, செவிடி, பொட்டி. இவர்களும் பண்ணைவீட்டு வேலைக்காரர்கள். இவர்களோடு பண்ணைவீட்டாரின் மகன் செல்வன். கொங்குநாட்டை கதைமையமாக எடுத்துள்ளார் ஆசிரியர். தமிழ்-தெலுங்கு கலந்த கொங்குத்தமிழை அப்படியே பதிவு செய்துள்ளார். கவுண்டர்களின் வாழ்க்கைமுறை, பண்ணயத்தில் விடப்படும் சிறுவர்-சிறுமியர்களின் உலகம், மேட்டுக் காடுகள், அதில் விவசாயம், பனை மரம், தென்னை மரம், கேட்பாரற்றுக் கிடக்கும் கிணறு, ஒடுக்குமுறைகள், சாதிய அடக்குமுறைகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டிய நிலை, ஆடுகள் பேசும் மொழி என வரிசையாக அடுக்கி வைக்கிறது இந்நாவல்.
அடி, வசை, புறக்கணிப்பு, இயலாமை அனைத்தையும் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு, அந்த வாழ்வில் கிடைக்கும் சிறுசிறு சந்தோஷங்களுடன் - காடை முட்டை சாப்பிடுவது, பனை ஏறுவது, கடலை பறிப்பது, ஆட்டுக்குட்டியை பிரசவிப்பது, கலங்கிய தண்ணீரில் குளியல், ஆண் பெண் நட்பு, சண்டை, பதின்மவயதுக்கான குறுகுறுப்பு - பெற்றோர்களின் நிலை என அனைத்தையும் தொட்டுத் தழுவுகிறது இந்நாவல்.
தென்னை மரத்தில் தேங்காய் பறித்ததற்காக கூளையனின் பண்ணையக்காரர் அவனை கயிற்றில் தலைகீழாகக் கட்டி தண்ணீர்க் கிணற்றில் இறக்கி விடுகின்றார். இந்த இடம்தான் நாவலின் ஆன்மா.
அந்நேரத்தில் ஆசிரியர் எழுதும் வார்த்தைகள் இவை:
'கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனம் உடலை இழந்தது. அந்தரத்தில் மிதப்பது கனமற்ற தக்கைதான் என்று பட்டது. தக்கையின் விளிம்பில் எங்கிருந்து தொடங்குகிறது என்று தெரியாத நீள நூல் கட்டி இருந்தது. தக்கை அந்த நூலின் பிடியிலிருந்து விடுபட முயன்றது. அதன் தவிப்பும் துள்ளலும் நூலின் முடிச்சை மேலும் இறுக்கமாக்கின. நூல் விட்டால் தக்கை விருப்பப்படி காற்றில் மிதந்து திரிய முடியும். காற்றில் வான்வெளியில் எங்கும் மிதப்பதுதான் தன் வேலை என்பதை உணர்ந்த தக்கைக்கு விடுபடும் வழி தெரியவில்லை. கீழ் நோக்கித் தன்னை அழுத்திப் பார்த்தது. நூல் கொஞ்சம் இளகி மீண்டும் மேலே இழுத்துக்கொண்டது. தக்கையைச் சுற்றிலும் விதவிதமான ஒலிகள். தக்கையைக் கேலி செய்வது போல அவை இருந்தன.'
நிற்க.
நாவலை மூடி வைத்த பொழுதிலிருந்து இவ்வார்த்தைகள் என் காதுகளில் ஏதோ சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஐதராபாத்திலிருந்து திருச்சிக்கு நேற்று ரயிலில் திரும்பியபோது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டு வர, என் கண்களில் பட்ட ஆட்டு மந்தைகள் நேற்று வித்தியாசமாகத் தெரிந்தன. ஆடுகளை மேய்த்துக்கொண்டவர்களில் கூளையனை, மொண்டியை, நெடும்பனை, மேற்சட்டை போடாத வவுரியை, புதிதாய்ச் சமைந்த செவிடியை, அவளுடைய தங்கை பொட்டியை என்னால் காண முடிந்தது.
இந்நாவல் என்னுள் எழுப்பிய சஞ்சலங்கள் இவை:
அ. மனித வாழ்வில் வெற்றி-தோல்வி என்பது ஒவ்வொரு தனிநபரும் நிர்ணயித்துக்கொள்வதுதான். வாழ்வு முழுவதும் ஆடு மேய்த்தும் பண்ணயத்தில் வேலை செய்தும் கழிப்பதால் கூளையன் வாழ்வில் தோற்றான் என்றில்லை. அவனுடைய வாழ்வும் வெற்றிதான். அவனுடைய வாழ்வும் கொண்டாடப்பட வேண்டியதுதான். இவன் ஆடுகளுக்குப் பிரசவம் பார்க்கும் பக்குவம் பாராளுமன்றத்தில் ஏஸி அறையில் நின்றுகொண்டு யாருக்கும் ஒரு பயனும் இல்லாத பட்ஜெட் வாசிக்கும் மஞ்சள் சேலை அம்மணிக்கு வருமா? அல்லது எனக்கு அல்லது உங்களுக்குத்தான் வருமா? கூளையனும் வெற்றியாளனே! ஆக, யாரையும் பார்த்து, 'இவர் வாழ்வில் தோற்றவர்' என்று இகழும் அருகதையும், 'இவர் வாழ்வில் வென்றவர்' என்று புகழும் அருகதையும் எனக்கில்லை.
ஆ. சந்தோஷங்கள் எல்லா இடத்திலும் எல்லா நபரிலும் இருக்கின்றன. சந்தோஷம் என்பதைப் பெறப் பணம் தேவையில்லை, உறவுகள் தேவையில்லை, பொருள் தேவையில்லை, படிப்பு தேவையில்லை. புழுதித் தூசியில் மல்லாந்து படுத்துக்கொண்டோ, ஆட்டு மூத்திரம் விழுந்த ஈரத்தில் புரண்டுகொண்டோ, பழைய பருப்பு சாதத்தை உண்டு ஏப்பம் விட்டுக்கொண்டோ, அடிபட்ட ஆட்டுக்குட்டியைக் கையில் ஏந்திக்கொண்டோ நொடிப்பொழுதில் சந்தோஷத்தை அனுபவித்துவிட முடியும். என் வாழ்வில் பல நேரங்களில் சந்தோஷத்தை நான் சில இடங்களில் சில நேரங்களில் என ரிசர்வ் செய்து வைத்திருப்பதைக் கேள்விக்குட்படுத்துகின்றான் கூளையன். அவனோடு சேர்ந்து செய்யும் ஒவ்வொன்றிலும் செய்யும் நேரத்திலேயே மகிழ்ந்திருக்க விரும்புகிறது மனம்.
இ. கொஞ்சம் உக்காந்து யோசிச்சு பார்த்தால் நம்ம மனுச வாழ்க்கையே தக்கைக்கும் நூலுக்குமான போராட்டம்தான். ஒவ்வொருவருக்கும் நூல் மட்டும்தான் வேறுபடுகிறது. கலை, ஆன்மீகம், படிப்பு, வேலை, குடும்பம், உறவுகள், உணர்ச்சிகள், உலகம் என நூலுக்கு வடிவங்கள் பல. போராட்டத்தின் வழி நாம் அடைய நினைப்பது நூலிலிருந்து விடுதலை. அது முடியாத பட்சத்தில் நூலின் நீளத்தையாவது அதிகரிக்க நினைக்கிறோம். தான் ஒரு தக்கை என்பதை, காற்றில் வான்வெளியில் எங்கும் மிதப்பதுதான் தன் வேலை என்பதை, ஆனால் தான் ஒரு நூலில் கட்டுண்டு கிடப்பதை அறியும் நேரம் முதல் தொடங்குகிறது போராட்டம். சிலர் விடுதலை அடைகின்றனர். சிலர் நூலின் நீளத்தை அதிகரிக்கின்றனர். பலர் தக்கை, நூல், வான்வெளி என எதையும் அறியாமலேயே வந்து, இருந்து, வாழ்ந்து, போய்விடுகின்றனர். சிலர் அறிந்தும் போராடிக்கொண்டே இருக்கின்றனர். அறியாமல் இருப்பதே சிறப்போ என்று எண்ணமும் சில நேரங்களில் எழுகிறது. நான் எந்த நிலையில் இருக்கின்றேனா? செக்குமாட்டு வாழ்க்கை போல செய்வதையே தினமும் செய்துகொண்டிருப்பதுபோல எனக்குத் தோன்றுகிறது. திருச்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழியப்போகின்றன. என் அறைக்கு வெளியே வராண்டாவில் ஒரு மாலை நேரத்தில் நாற்காலி போட்டு அமர்ந்துகொண்டு, கையில் ஒரு தேநீர்க்கோப்பையுடன் எதிரில் தெரியும் மரத்தில் புதிதாய்க் கூடுகட்டும் குருவியைப் பார்க்கவோ, ஆசையாய்த் தேடி வாங்கிய புத்தகங்கள் படிக்கவோ, யாரிடமும் சொல்லாமல் என் கைபேசியை அப்படியே அறையில் வைத்துவிட்டு அப்படியே நீண்ட பயணம் புறப்படவோ என்னால் முடியவில்லை. நத்தம்பட்டியில் அந்த 13 வயதில் இவை எல்லாமே கிடைத்தன. என் நூல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே வருகிறதேயன்றி அதை நான் அறுத்தெரியும் வழியை அறிந்திலேன்!
ஆசிரியர் பெருமாள்முருகனுக்கு வாழ்த்துக்கள்!