Monday, December 9, 2019

தொலைந்து போனவர்கள்

இன்றைய (10 டிசம்பர் 2019) முதல் வாசகம் (எசாயா 40:1-11)

தொலைந்து போனவர்கள்

2005ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி வெளிவந்த இணையதளச் செய்தி: 'பைஜாமா அணிந்து ஒரு மனிதர் இறந்து கிடந்தார்.' ஒருவர் இறக்கிறார் என்றால் அவர் தன்னுடைய வீட்டில் உறவினர்கள் சூழ்ந்து நிற்க இறந்து போயிருக்கலாம். அல்லது மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இறந்திருக்கலாம். ஆனால், இந்த மனிதர் இறந்து கிடந்தது அடுக்குமாடிக்கட்டிடம் ஒன்றின் 12வது மாடியில். இந்த அடுக்குமாடிக்கட்டிடத்தை இடிக்க நபர்கள் சென்றபோது ஒரு மனிதர் அவருடைய அறையில் இறந்து கிடப்பதைக் காண்கிறார்கள். அவர் அருகில் உள்ள மேசையில் இருந்த காலண்டர் 1985ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி என்று காட்டுகிறது. அங்கே விரிக்கப்பட்டிருந்த டைரியிலும் அதே தேதிதான் இருந்தது. இறந்துகிடந்தது ஒரு நபர் அல்ல. ஒரு எலும்புக்கூடு பைஜாமா அணிந்து படுத்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இறந்து எலும்புக்கூடாய் மாறியிருக்கிறார். யாரும் அவரைத் தேடவில்லை. டோக்யோ மாநகரம் தொழில்நுட்பத்தில் மிக முன்னேறிய நகரம். யார் எங்கே இருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை யாரும் கண்டுபிடித்துவிட முடியும். பைஜாமாவில் இறந்து கிடந்த நபர் நமக்கு நிறையக் கேள்விகளை வைக்கின்றார்:

20 வருடங்களாக இவரை யாருமே தேடவில்லையா?

இவருக்கென்று நண்பர்கள் கிடையாதா?

யாரும் தேவையில்லை என்று இவர் முடிவெடுத்து தன்னையே தனிமைப்படுத்தக் காரணம் என்ன?

மற்றவர்களின் பார்வையிலிருந்து இவர் தொலைந்துபோனாரா?

'ஓடும் ஆறு' என்ற நூலில் இந்நிகழ்வைப் பதிவு செய்கிறார் பவுலோ கோயலோ.

இன்றைய முதல் வாசகத்திலும் நற்செய்தி வாசகத்திலும் 'ஆயன் தன் மந்தையைத் தேடும்' உருவகம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

நம்முடைய ஃபோனில் நமக்கு 'தவறிய அழைப்புகள்' - 'மிஸ்ட் கால்ஸ்' இருக்கும்போது நம்மில் தோன்றும் உணர்வு என்ன? சில எண்கள் நமக்கு எரிச்சலைத் தந்தாலும், சில எண்கள் நமக்கு ஆர்வத்தைத் தூண்டினாலும், ஒட்டுமொத்தமாக நம்மை யாரோ தேடியிருக்கிறார்கள் என்பதையே 'தவறிய அழைப்புகள்' நமக்குக் காட்டுகின்றன.

தன் மந்தையிலிருந்து தவறியவர்களை அழைக்கிறார் கடவுள்.

இன்றைய முதல் வாசகத்தின் பின்புலம் பாபிலோனியப் படையெடுப்பு. பாபிலோனியப் படையெடுப்பில், அங்கே நாடுகடத்தப்பட்டு திக்கற்றவர்களாய் நின்ற மக்களைத் தம்மிடம் அழைக்கின்ற கடவுள், 'ஆறுதல் கூறுங்கள். என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்' என்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் தேடுதல் மூன்று நிலைகளில் இருக்கின்றது:

அ. ஆயனைப் போல தம் மந்தையை அவர் மேய்ப்பார்

கூலிக்காரன் மேய்ப்பதற்கும் ஆயன் மேய்ப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. கூலிக்காரன் மந்தையை ஒரு பொருளாகப் பார்ப்பான். ஆயன் அதை உயிராகப் பார்ப்பார். ஆபத்து என்று வரும்போது கூலிக்காரன் தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள முனைவான். ஆயனோ மந்தையின் நலனுக்காக தன் உயிரையும் இழக்கத் துணிவார். கூலிக்காரன் மந்தையோடு இருக்கும் தன்னுடைய உடனிருப்பை பணமாகப் பார்ப்பான். ஆயன் அப்படிப் பார்ப்பது இல்லை.

ஆ. ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்

ஆட்சி செலுத்துகின்ற ஆண்டவரின் கை இங்கே இளம் பிஞ்சு ஆடுகளை அரவணைக்கிறது. ஆட்டுக்குட்டிகளை வழக்கமாக ஆயன் தன்னுடைய கோல் அல்லது குச்சியைக் கொண்டே ஒன்று சேர்ப்பார். குட்டி ஆடுகளை ஒன்று சேர்க்க கைகளைப் பயன்படுத்த வேண்டுமானால் ஆயன் குனிய வேண்டியிருக்கும். ஆண்டவர் என்னும் ஆயன் தன் குட்டிகளைப் பயமுறுத்தும் கோலை விடுத்துத் தன் கைகளால் அரவணைத்துக்கொள்ள குனிகின்றார். அவருக்கு வலித்தாலும்!

இ. சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்

மற்ற மந்தையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடக்க முடியாத சினையாடுகளின்மேல் சிறப்பான கவனம் செலுத்துகிறார் ஆயன். மேலும், சினையாடுகளே ஓநாய்களின் பாய்ச்சலுக்கு ஆளாபவை. ஆனால், அவற்றின்மேல் சிறப்பான கவனம் செலுத்துவதன் வழியாக அவைகளைப் பாதுகாக்கிறார் ஆண்டவர் என்னும் ஆயன்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 99 ஆடுகளை விட காணாமற்போன ஓர் ஆட்டை மதிப்பானதாகக் கருதுகிறார் ஆயன்.

இவை சொல்வது ஒன்றேதான்.

நாம் நம் வாழ்வில் தொலைந்துபோகும் தருணங்களில் ஆண்டவர் நம்மைத் தேடுகின்றார்.

அன்றாட வாழ்வில் தொலைந்துபோகும் நம் சகோதர, சகோதரிகளை நாம் தேடினால் நாமும் ஆயர்களே!


2 comments:

  1. பவுலோ கோயலின் ‘ஓடும் ஆற்றின்’ பதிவு தரும் செய்தி அசாதாரணமானது.தொழில் நுட்பத்தில் முன்னேறிய டோக்கியோ நகரின் ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தில் காணப்பட்ட அந்த பைஜாமா அணிந்த எலும்புக்கூட்டின் வர்ணனை நெஞ்சைப் பிசைகிறது.20 வருடங்களாக யாரும் தேடாத அந்த நபர் ஒருபுறமெனில், எந்தேரமும் தன் தவறிய மந்தையைக்குறித்த தேடலோடு இருக்கும் இறைவன் மறுபுறம். மனிதனின் இயல்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயல்புடைய இறைவன்.. ....தன் மந்தையுடனான உடனிருப்பை எப்பொழுதுமே விரும்பும் இறைவன்....அவரின் உடல் வலியைப் பொருட்படுத்தாது குனிந்து தன் மந்தையை அணைக்கும் இறைவன்....வலுவற்ற தன் சினையாடுகள் மீது அதீத அக்கறை காட்டும் இறைவன்.....இந்த மூன்றில் ஏதேனும் ஒரு சாயலேனும் என்னிடமிருப்பின் நான் பாக்கியசாலியே! அவரிலிருந்து அவ்வப்போது தொலைந்துபோகும் நம்மைத் தேடும் ஆண்டவர்போல, அன்றாட வாழ்வில் தொலைந்து போகும் நம் சகோதர,சகோதரிகளை நாம் தேடினால் நாமும் ஆயர்களே! ஆசீர்வாதமான வார்த்தைகள். ஆயராக மாறுவோம்; ஆண்டவனில் கலப்போம்.
    “ தவறிய அழைப்புகள்”...அழகான வார்த்தை.சில அழைப்புகள் எரிச்சலைத் தந்தாலும் யாரோ நம்மை அழைத்திருக்கிறார்கள் எனும் நினைப்பு கூட நமக்கு சமயத்தில் மகிழ்ச்சி தருவது உண்மையே! மனித மனத்தின் உண்மை முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் தந்தை... வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    ReplyDelete
  2. ஆயன் பின்னே நடக்கும் 99 ஆடுகளை விட, தடம் மாறிய அந்த ஒரு ஆட்டையே மதிப்பானதொன்றாக இறைவன் கருதுவாரெனில் தடம் புரளுவதிலும் ஒரு கிளுகிளுப்பு உண்டுதானே! இல்லையா?

    ReplyDelete